என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முருக பக்தர்கள் மாநாட்டையொட்டி மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்
- மேலூரில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் பூவந்தி, திருப்புவனம் வழியாக விரகனூர் சுற்றுச்சாலை சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.
- மதுரை பாண்டிகோவில் சந்திப்பு முதல் விரகனூர் சந்திப்பு வரை மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
மதுரை:
மதுரையில் இன்று இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்களின் ஆன்மீக மாநாட்டை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் மீனாட்சி மிஷன் மருத்துவமனை, பாண்டிகோவில் சுற்றுச் சாலை, கருப்பாயூரணி, சிலைமான், விரகனூர் சுற்றுச்சாலை வழியாக வழக்கமான பாதையில் செல்ல வேண்டும்.
ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசியில் இருந்து மதுரை வரும் பேருந்துகள் விரகனூர் சந்திப்பில் இருந்து தென் கரை சாலை, அரவிந்த் கண் மருத்துவமனை, அண்ணாநகர் வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். மேலூரில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் பூவந்தி, திருப்புவனம் வழியாக விரகனூர் சுற்றுச்சாலை சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் திருமங்கலம், கப்பலூர், சமயநல்லூர், வாடிப்பட்டி வழியாக செல்ல வேண்டும். மதுரை பாண்டிகோவில் சந்திப்பு முதல் விரகனூர் சந்திப்பு வரை பொது மக்களின் கார், இருசக்கர வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. மதுரை பாண்டிகோவில் சந்திப்பு முதல் விரகனூர் சந்திப்பு வரை மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.






