என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

130 அடியை எட்டிய நீர்மட்டம்: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
- அணைக்கு வினாடிக்கு 6125 கன அடி தண்ணீர் வருவதால் இன்று மாலையே 130 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வைகை அணையின் நீர் இருப்பை பொறுத்து இருபோக பாசன நிலங்களின் முதல்போகத்திற்கு ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படும்.
கூடலூர்:
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே தொடங்கியது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 23-ந்தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
கடந்த 6 நாட்களில் மட்டும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 15 அடி வரை உயர்ந்துள்ளது. வழக்கமாக அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்திற்காக ஜூன் மாதம் முதல் தேதியில் தண்ணீர் திறப்பது வழக்கம்.
தற்போது அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் தங்கள் நிலங்களை தயார்படுத்தி வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் 1350 கன அடி திறக்கப்பட்டு பின்னர் 900 கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று 460 கன அடி திறக்கப்பட்டு இன்று காலையில் மீண்டும் 1400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 129.85 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6125 கன அடி தண்ணீர் வருவதால் இன்று மாலையே 130 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர் இருப்பு 4665 மி.கன அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும் குடிநீர் மற்றும் பாசன தேவைக்காகவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக நாளை முதல் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் 14707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை காரணமாகவும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான கொட்டக்குடி ஆறு, வருஷநாடு, வைகை ஆறுகள் உள்ள பகுதியில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து உயர்ந்தது. வைகை அணையின் நீர் இருப்பை பொறுத்து இருபோக பாசன நிலங்களின் முதல்போகத்திற்கு ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படும். தற்போது பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை அணையின் நீர்மட்டம் 54.36 அடியாக உள்ளது. வரத்து 949 கன அடி. திறப்பு 72 கன அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 2617 மி.கன அடி.
இதனால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நிலங்களின் பாசனத்திற்கு ஜூன் முதல் வாரத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரியாறு அணை 27.8, தேக்கடி 13.6, போடி 4.4, மஞ்சளாறு, அரண்மனைபுதூர் தலா 4, வீரபாண்டி 3.2, கூடலூர் 3.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.






