என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி கொடுத்தது வாக்கு அரசியலா? - மு.க.ஸ்டாலின்
- அரசியல் என்றால் பொறுப்பை மறந்து கவர்ச்சி திட்டம் அறிவிப்பது என சிலர் கருதுகின்றனர்.
- எளியோருக்கு செய்யும் எண்ணற்ற திட்டங்களை வாக்கு அரசியல் என்று கூற முடியுமா?
பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், "அன்புக்கரங்கள்" திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
அந்த குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதுடன், பள்ளிப்படிப்பு முடித்த பின்னர் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்க வழிவகை செய்யும் இத்திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையினை வழங்கினார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* சாமானிய மக்களின் எழுச்சித்தான் திராவிட இயக்கம்.
* அரசியல் என்பது மக்களுக்கான பணி, கடுமையான பணி. இங்கு சொகுசுக்கு இடமில்லை.
* அரசியல் என்றால் பொறுப்பை மறந்து கவர்ச்சி திட்டம் அறிவிப்பது என சிலர் கருதுகின்றனர்.
* கொரோனா தொற்று ஏற்பட்ட நெருக்கடியான சூழலில் நாம் ஆட்சி பொறுப்புக்கு வந்தோம்.
* கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணத் தொகை வழங்கினோம்.
* அன்புக்கரங்கள் திட்ட நிகழ்வில் பேசிய குழந்தைகளின் சிரிப்புதான் அண்ணாவிற்கு நாங்கள் செய்யும் மரியாதை.
* மக்களுடன் மக்களாக எப்போதும் இருப்பதால்தான் அனைவருக்குமான தேவைகளை செய்ய முடிகிறது.
* எளியோருக்கு செய்யும் எண்ணற்ற திட்டங்களை வாக்கு அரசியல் என்று கூற முடியுமா?
* காலை உணவுத்திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள் எல்லாம் வாக்கு அரசியலா?
* கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி கொடுத்தது வாக்கு அரசியலா?
* அன்புக்கரங்கள் திட்டத்தில் 6,000 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






