என் மலர்
தமிழ்நாடு

பதவி வியாபாரி பழனிசாமி மற்றவர்களை வியாபாரி என்று சொல்வதுதான் நகைமுரண்- செந்தில் பாலாஜி

- சுயநலத்திற்காக தமிழ்நாட்டையே பா.ஜ.க.விடம் அடமானம் வைத்தார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவர்.
- புளிமூட்டையில் ஆரம்பித்து அரசியல் வரை எல்லாவற்றையும் எந்தவொரு அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் வியாபாரி பழனிசாமி.
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அமைச்சர்கள் செந்தில் பாலாஜியும், சேகர் பாபுவும் என்னை 'அமைதிப்படை அமாவாசை' என்று விமர்சனம் செய்கிறார்கள். இருவரும் அரசியல் வியாபாரிகள். இவர்கள் அ.தி.மு.க.வில் இருந்த போது சட்டசபையில் கருணாநிதி மற்றும் தி.மு.க. முக்கிய பிரமுகர்களை எப்படி எல்லாம் விமர்சனம் செய்தார்கள் என்று அவைக்குறிப்பில் உள்ளது என்பதை அவர்கள் அறிய வேண்டும்.
செந்தில் பாலாஜிக்கு 'அமைதிப்படை அமாவாசை' என்ற பெயர் பொருத்தமாக இருக்கும். தனக்குத்தானே அந்த பெயரை தேர்வு செய்து கொண்டார். அமைச்சர்கள் சேகர்பாபுவும், செந்தில் பாலாஜியும் அரசியலில் வேடந்தாங்கல் பறவைகள் போன்றவர்கள்.
சில காலம் ஒரு இடத்தில் இருப்பார்கள். சில காலம் வேறு இடத்திற்கு சென்று விடுவார்கள். இதுவே அவர்களுடைய நிலைப்பாடு. கட்சியின் மீது விசுவாசம் இருப்பவர்கள் என்னை போன்று ஓரிடத்தில் நின்று பொறுமை காப்பார்கள். இவர்களைப் போன்றவர்களுக்கு ஒரு கட்சியில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது என்று தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்..
பழனிசாமி தனிப்பட்ட வகையில் எத்தனை பேருக்கு துரோகம் செய்தார் என்ற கணக்கை கூட விட்டுவிடலாம்; தனது பதவி நிலைத்திருக்க வேண்டும் எனும் சுயநலத்திற்காக தமிழ்நாட்டையே பா.ஜ.க.விடம் அடமானம் வைத்தார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவர்..
புளிமூட்டையில் ஆரம்பித்து அரசியல் வரை எல்லாவற்றையும் எந்தவொரு அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் வியாபாரி பழனிசாமி எப்படியான அரசியல் வியாபாரி என்பது அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு மிக நன்றாக தெரியும்..
அடிமைக் கூட்டத்திற்கு லாவணி பாடாதவர்களுக்கு எல்லாம் ஏதாவதொரு முத்திரை குத்தி அவர்களைக் காலி செய்வதற்காக எந்தவொரு லாபியும் செய்யத் தயங்காத பதவி வியாபாரி பழனிசாமி மற்றவர்களைப் பார்த்து வியாபாரி என்று சொல்வதுதான் நகைமுரண்.. என்று தெரிவித்துள்ளார்.
தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்..பழனிசாமி அவர்கள் தனிப்பட்ட வகையில் எத்தனை பேருக்கு துரோகம் செய்தார் என்ற கணக்கை கூட விட்டுவிடலாம்;…
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) January 22, 2025