என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? - இ.பி.எஸ்.க்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேள்வி
- 2026 தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படை மீண்டும் ஆட்சி அமைப்போம்.
- சர்வாதிகாரி பற்றியெல்லாம் பாடம் எடுக்க பழனிசாமிக்கு அருகதை இருக்கிறதா?
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலக சர்வாதிகாரிகள் அத்தனை பேரின் டி.என்.ஏ-வாக இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஹிட்லர், முசோலினி, நீரோ போன்றவர்களை எல்லாம் திமுக ஆட்சியின் மீது அடைமொழியாகக் காட்டுவது அரசியல் அவலம். வரலாறு தெரிந்தால் பேசுங்கள் பழனிசாமி அவர்களே! இல்லையென்றால் வழக்கம் போல அடிமைத்தனம் என்ற விசுவாசத்தை மட்டுமே மோடிக்குக் காட்டிக் கொண்டிருங்கள். ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லரை இரண்டாம் உலகப்போரின் இறுதியில் வீழ்த்தியது ஸ்டாலினின் செம்படைதான். இந்தச் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படை மீண்டும் ஆட்சி அமைத்து, உங்களின் எதிர்கட்சி என்ற அந்தஸ்தையும் வீழ்த்தும். எதிர்க் கட்சித் தலைவர் பதவியையும் பறிகொடுத்துவிட்டு நிற்கப் போகிறீர்கள்!
தமிழ்நாட்டில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்றும் தமிழ்நாட்டில் பெண்களின் பெரும்பான்மையான ஆதரவு திமுகவிற்குத்தான் உள்ளது என்றும் முன்னணி ஊடகங்களில் கருத்துக் கணிப்புகள் வெளியாகி, தமிழ்நாட்டு மக்களின் உணர்வைப் பிரதிபலித்துக் கொண்டிருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், வெற்றி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அவதூறுகளையாவது அள்ளித் தெளிப்போம் என சூனா பானாவாக கிளம்பிவிட்டார் பழனிசாமி!
மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்புகளால் விரக்தியில் என்ன செய்வது என்று தெரியாமல் அறிக்கை என்ற பெயரில் கிறுக்கித் தள்ளியிருக்கிறார் பழனிசாமி.
டெல்லியில் சதித்திட்டம் தீட்டி சர்வாதிகார எண்ணத்தோடு தமிழ்நாட்டின் மீது ஏவப்படும் எந்த ஆதிக்கத்தையும் வெற்றியடைய விடமாட்டோம். எந்தக் கொம்பனாலும், தமிழ்நாட்டைத் தலைதாழ்த்தி விட முடியாது என்பதில் உறுதியாகப் போரடிக் கொண்டிருப்பது திராவிட மாடல் அரசும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும்தான். ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்குச் செய்யும் அநீதிகளுக்கும் அவர்களது தமிழ்ப் பகை நடவடிக்கைகளுக்கும் எதிராக 'தமிழ்நாட்டைத் தலைகுனியவிட மாட்டேன்'என்று சொன்னால் பழனிசாமிக்கு ஏன் எரிகிறது?
டெல்லி ஓனர்களுக்கு அடிமையாக வாழ்வதிலே தனக்கு நிகராக யாரும் வந்துவிடக் கூடாது எனப் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் வாழ்நாள் அடிமை பழனிசாமி, சரித்திரப் புத்தகங்கள், சர்வாதிகாரிகள் என்றெல்லாம் நகைச்சுவை செய்துகொண்டிருக்கிறார். ஜனநாயகத்தைச் சீரழித்து இந்த நாட்டையே சர்வாதிகார ஆட்சியாக்கிவிடும் நோக்கத்தோடு நாளும் பொழுதும் ஆதிக்கத் திட்டங்களைச் செயல்படுத்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. மோடி என்ற சர்வாதிகாரியைப் போற்றிக் கொண்டிருக்கும் பழனிசாமி, சர்வாதிகாரி பற்றியெல்லாம் பாடம் எடுக்க அருகதை இருக்கிறதா?
ஒன்றிய அரசின் காலில் விழுந்து, கைகோத்து தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்கின்ற பழனிசாமிக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரைக் குறைகூற எந்த அருகதையும் இல்லை. பொள்ளாச்சி சம்பவத்தை வேடிக்கை பார்த்துவிட்டு இப்பொழுது பெண்கள் பாதுகாப்பு பற்றிப் பேச தகுதியும் இல்லை. பழனிசாமியின் படுபாதக ஆட்சியில் தமிழ்நாட்டுப் பெண்கள் எப்படிப் பட்ட சூழ்நிலையில் வாழ்ந்தார்கள்? என்பதற்கு பொள்ளாச்சியே உதாரணம். தமிழ்நாட்டு மக்கள் அந்த அவலங்களை மறந்திருப்பார்கள் என்று நினைத்து பொய்களை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில்தான் போதைப் பொருள்களைத் தடுக்க வரலாற்றில் இல்லாத அளவுக்குக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. போதைப் பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபடுபவர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். கைது செய்யப்பட்டவர்களை விசாரித்தால் பின்னணியில் இயங்கும் போதைப் பொருள் மாஃபியாக்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. இந்த மாஃபியாக்களோடு தொடர்பில் இருப்பவர்களாக அதிமுக நிர்வாகிகள் இருக்கின்றனர். நடிகர்களுக்குப் போதைப் பொருள் விநியோகம் செய்த பிரசாத் என்பவருக்கு அதிமுக ஐடி விங் பொறுப்பு கொடுத்து அழகு பார்த்துவிட்டு, செய்தி வெளியில் தெரிந்ததும் அவசர அவசரமாக அவரைப் பொறுப்பிலிருந்து நீக்கிய உத்தமர்தான் பழனிசாமி.
ஏய்ப்பவருக்கே காலம் என்று எண்ணிவிடாதே என எம்.ஜி.ஆரின் பாடலை மேற்கோள் காட்டும் பழனிசாமிக்கு, அதே எம்.ஜி.ஆர் பாடிய அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு? என்ற பாடல் ஏன் நினைவுக்கு வரவில்லை. தமிழ்நாட்டில் திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் மீண்டும் அமையப் போகிறது. தமிழ்நாட்டில் இனி ஒரு நாளும் பாஜகவின் அடிமை ஆட்சி அமையப் போவதில்லை, பழனிசாமியின் அரசியல் அத்தியாயத்திற்கு 2026 தேர்தலோடு முடிவுரை எழுதப்படப் போகிறது என்கிற உண்மைகள் சுடுவதால் விரக்தியில் பழனிசாமி உதிர்த்து வரும் உளரல்கள் உண்மையாகிவிடாது" என்று தெரிவித்தார்.






