என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மானாமதுரையில் டாஸ்மாக் கடைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
- டாஸ்மாக் கடைக்குள் இருந்த அனைத்து வகையான மது பாட்டில்களும் எரிந்து நாசமானது.
- கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றை ஒட்டி அதன் கரையோர பகுதியில் அரசு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த கடைக்கும் மானாமதுரை மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மது பிரியர்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்கள் சென்றுவிட்டனர்.
இந்தநிலையில் நள்ளிரவில் டாஸ்மாக் கடை தீப்பற்றி எரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பார்த்த போது கடை முழுவதும் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. பின்னர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விபத்து நடந்த பகுதிக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரமாக தீயை அணைக்க போராடினர்.
நேற்று காலையில்தான் சிவகங்கை மாவட்ட குடோனில் இருந்து விற்பனைக்காக பல லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்முதல் செய்யப்பட்டு இருந்தது. திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தில் கடைக்குள் இருந்த ரேக்குகள், அட்டை பெட்டிகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. உடைந்த பாட்டில் சிதறல்கள் பல மீட்டர் தூரம் வரை சென்று விழுந்தன.
கடுமையான போராட்டத்துக்கு பிறகு தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருந்தபோதிலும் டாஸ்மாக் கடைக்குள் இருந்த அனைத்து வகையான மது பாட்டில்களும் எரிந்து நாசமானது. அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.30 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாராவது தீ வைத்துவிட்டு சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.
ஆனால் நள்ளிரவில் அந்த பகுதிக்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றித்திரிந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
பல ஆண்டுகளாக வைகை ஆற்றையொட்டி செயல்பட்ட டாஸ்மாக் கடை தீ விபத்தில் முழுமையாக எரிந்து சேதமாகி இருப்பது மானாமதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






