என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை திருடி பெட்ரோல் தீர்ந்ததும் அனாதையாக விட்டுச் சென்ற நபர்
- பூம்பாறை செல்லும் சாலையில் அந்த மோட்டார் சைக்கிள் கேட்பாரற்று கிடந்தது.
- பெட்ரோல் இருக்கும் வரை பைக்கை ஓட்டி விட்டு பின்னர் சாலையோரம் அந்த வாலிபர் நிறுத்திச் சென்றுள்ளார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் ஏரிச்சாலையில் தனியார் உணவு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியை நடத்தி வரும் லிபு என்பவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை ஓட்டல் முன்பு நிறுத்தி இருந்தார். இரவு வந்து பார்த்தபோது அது திருடு போயிருந்தது. இதனையடுத்து தனது கடையில் பொருத்தி இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது உணவு அருந்த வருவது போல வந்த ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளை நைசாக சிறிது தூரம் தள்ளிச் சென்று திருடிச் சென்ற காட்சி பதிவாகி இருந்தது.
இதனையடுத்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளையும், அதனை திருடிய வாலிபரையும் தேடி வந்தனர். இந்நிலையில் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை செல்லும் சாலையில் அந்த மோட்டார் சைக்கிள் கேட்பாரற்று கிடந்தது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு நின்றிருந்தது ஓட்டல் உரிமையாளர் லிபுவின் பைக் என தெரிய வந்தது. பெட்ரோல் இருக்கும் வரை பைக்கை ஓட்டி விட்டு பின்னர் சாலையோரம் அந்த வாலிபர் நிறுத்திச் சென்றுள்ளார். 4 நாட்களுக்கு பிறகு மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்ட நிலையில் அதனை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அவ்வப்போது திருடப்பட்டு வரும் சூழலில் ஓட்டல் உரிமையாளரின் பைக் திருடப்பட்ட சம்பவம் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






