என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது- எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த மைத்ரேயன்
- டெல்லி என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்படுபவர்களாகத்தான் அ.தி.மு.க. தலைமை உள்ளது.
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போலவே தன்னையும் ஒரு பெரிய தலைவர் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்துக்கொண்டு இருக்கிறார்.
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
அ.தி.மு.க.வின் போக்கு சரியாக இல்லை.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்துள்ளார். கூட்டணியை அறிவித்தது மத்திய அமைச்சர் அமைச்சர் அமித்ஷா தான். கூட்டணி ஆட்சி என்று சொல்லி இருக்கிறார். குறைந்தபட்ச செயல் திட்டம் என்று சொல்லி இருக்கிறார்.
எதிலே குறைந்தபட்ச செயல்திட்டம் வரும் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். மொழிக்கொள்ளை, இருமொழிக்கொள்கை, கல்வி திட்டத்தில் தேசிய கல்வியா, மாநில கல்வியா, தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவது, தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை இப்படி பலவற்றில் எந்த அடிப்படையில் அவர்களுக்கு ஒருமித்த கருத்து வரப்போகிறது என்ற தெளிவே இல்லாமல் இருக்கிறது.
அ.தி.மு.க.வில் பல்வேறு குழப்பங்கள் உள்ளது. பல்வேறு நிர்வாகிகள் மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள். ஒரு சில நபர்கள் திட்டமிட்டு கட்சியை அவர்கள் கைப்பிடியில் வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள்.
அமைப்பு செயலாளர் என்று எனக்கு பதவி கொடுத்தார்கள். ஆனால் என்னை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் தான் அங்கிருந்து விலகி வந்துவிட்டேன்.
சமீபத்தில் அன்வர் ராஜா, கார்த்திக் தொண்டைமான் வந்தார்கள். இன்று நான் வந்து இருக்கிறேன்.
திராவிட இயக்கத்தை சார்ந்த கட்சி, பெரும்பான்மை பலத்தை உடைய கட்சி கூட்டணியை அதுதான் முடிவு செய்யும். அந்த கட்சி தான் முடிவு செய்யும்.
அ.தி.மு.க.வில் அதை முடிவு செய்வது டெல்லியாக உள்ளது. டெல்லி என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்படுபவர்களாகத்தான் அ.தி.மு.க. தலைமை உள்ளது.
ஒரு வேளை அ.தி.மு.க. ஆட்சி வந்தால் அதில் பா.ஜ.க. பங்கு எந்த அளவுக்கு இருக்கும், மத்திய அரசின் தலையீடு எந்த அளவிற்கு இருக்கும் இதையெல்லாம் யோசிப்பார்கள்.
இன்றைக்கு எந்த அளவிற்கும் பிரச்சனை இல்லாமல் முன்னேற்ற பாதையில் தளபதியின் தலைமையில் தமிழ்நாடு பீடுநடை போட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த ஆட்சி தொடர்வதற்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். நிச்சயம் 200-ஐ தாண்டுவோம். இதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.
தொடர்ந்து கட்சி மாறிட்டோம் என்று சொல்வது தவறான வாதம். ஒரு இயக்கத்தில் இருக்கிறேன். அந்த இயக்கத்தில் சந்தோஷமாக இருந்தால் நிச்சயமாக மாற மாட்டேன். பிரச்சனைகள் வருகிறது. சந்தோஷம் இல்லை. புழுக்கத்திலேயே அந்த இயக்கத்தில் தொடர்ந்து இருப்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை. வாழ்க்கையில் மாற்றம் ஒன்றே மாறாதது. அடுத்த இலக்கை நோக்கி செல்கிறோம்.
ஓ.பி.எஸ். உடன் தொடர்பு இருந்தது. இப்போது கிடையாது.
கூட்டி வரப்பட்ட கூட்டத்தை பார்த்து விட்டு இ.பி.எஸ். என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார் என்று நான் கருதுகிறேன் என்றால் ஒரு எம்.ஜி.ஆர். போலவோ, ஜெயலலிதாவை போலவே தன்னையும் ஒரு பெரிய தலைவர் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்.
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
இவ்வாறு அவர் கூறினார்.






