என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நீதியை நிலைநிறுத்தியது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு- கமல் ஹாசன்
    X

    நீதியை நிலைநிறுத்தியது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு- கமல் ஹாசன்

    • இந்த வழக்கில் துணிந்து சாட்சியம் அளித்த பெண்கள் வணங்கிப் போற்றத்தக்கவர்கள்.
    • வழக்கை சரியான முறையில் நடத்திச் சென்று, தக்க தண்டனை வழங்கிய நீதித்துறைக்குப் பாராட்டுகள்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.

    இதில் பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன்(வயது 30), வசந்தகுமார்(32), சதீஷ் (33), மணிவண்ணன் (30), திருநாவுக்கரசு (30), ஹேரேன் பால் (34), பாபு என்ற பைக் பாபு (38), அருளானந்தம் (38), அருண்குமார் (36) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நீதியை நிலைநிறுத்தியது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அதிகாரத் திமிரில், ஆணவத்தோடு ஒரு நாகரிக சமூகம் நினைத்துப் பார்க்கவும் கூசும் கொடுமையைப் பொள்ளாச்சியில் நடத்திக்காட்டிய குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கியிருக்கும் தீர்ப்பை மக்கள் நீதி மய்யம் வணங்கி வரவேற்கிறது.

    கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை கடத்திச் சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் 2019-ல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இளம்பெண்கள் கதறிக்கொண்டு தப்ப முயலும் வீடியோக்கள் வெளியாகி மக்கள் மனசாட்சியை உலுக்கின.

    இந்த வழக்கில் துணிந்து சாட்சியம் அளித்த பெண்கள் வணங்கிப் போற்றத்தக்கவர்கள். போலியான அவதூறுகளுக்கு அஞ்சாமல், பிறழ்சாட்சிகளாக மாறாமல் தாங்கள் பாதிக்கப்பட்டதை விசாரணையில் வெளிப்படுத்திய அவர்களது தீரம் பாராட்டத்தக்கது. பிறரும் இதுபோல் பாதிக்கப்படாமல் இருக்க இந்தத் துணிச்சல் மிகுந்த செயல்பாடு வழிவகுக்கும்.

    இது போன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களை இந்தச் சமூகம் இழிவாகப் பார்க்கலாகாது என்பது உணர்த்தப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்க ஒன்று. வழக்கை சரியான முறையில் நடத்திச் சென்று, தக்க தண்டனை வழங்கிய நீதித்துறைக்குப் பாராட்டுகள்.

    என கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டது.

    Next Story
    ×