என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    125 ஆண்டுகளில் இல்லாத அளவு... இந்தியாவில் மே மாதத்தில் இயல்புக்கு அதிகமாக மழைப்பொழிவு
    X

    125 ஆண்டுகளில் இல்லாத அளவு... இந்தியாவில் மே மாதத்தில் இயல்புக்கு அதிகமாக மழைப்பொழிவு

    • கோடை காலத்தில் இதுவரை இல்லாத வகையில் மழை பெய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    • மொத்தம் 260 பேர் உயிரிழந்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் புள்ளி விவரங்களுடன் சுட்டிக்காட்டியிருக்கிறது.

    சென்னை:

    இந்தியாவில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என 2 மழை காலங்கள் இருக்கின்றன. இதில் தென் மேற்கு பருவமழை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், வடகிழக்கு பருவமழை தென் இந்தியாவிலும் மழையை கொடுக்கிறது.

    இதுதவிர, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைக்கக்கூடிய காலமாக இருக்கிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் ஆங்காங்கே தென்பட்டாலும், இந்தியாவில் பல இடங்களில் கோடை மழையும் கைக்கொடுத்து இருக்கிறது.

    அந்த வகையில் கோடை காலத்தில் இதுவரை இல்லாத வகையில் மழை பெய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் கடந்த மாதம் (மே) இந்தியாவில் இயல்புக்கு அதிகமாக மழை கொட்டியிருப்பதாகவும், 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மழை பதிவாகி இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அந்த மாதத்தில் 30 அதி கனமழை நிகழ்வுகளும், 155 மிக கனமழை நிகழ்வுகளும், 514 கனமழை நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளது. அப்படி பெய்த மழையினாலும், மழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிகழ்வுகளாலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.

    அதன்படி, இடி-மின்னல் தாக்கி மட்டும் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா, சத்தீஷ்கார், கர்நாடகா, ஜார்கண்ட், பீகார், டெல்லி, அரியானா, மத்திய பிரதேசம், தெலுங்கானா, அசாம், குஜராத், கேரளா, பஞ்சாப், சண்டிகர், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் 199 பேர் இறந்துள்ளனர்.

    மேலும் கனமழை, பெருவெள்ளத்தினால் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, அசாம், டெல்லியில் 58 பேரும், காற்றினால் ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரபிரதேசத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். ஆக மொத்தம் 260 பேர் உயிரிழந்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் புள்ளி விவரங்களுடன் சுட்டிக்காட்டியிருக்கிறது.

    பொதுவாக மே மாதத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும். இந்த காலங்களில் வெப்ப அலையினால் (ஹீட் வேவ்) பலருக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டு அதனால் உயிரிழப்புகள் பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு மே மாதம் அப்படியே தலைகீழாக மாறி, வெப்ப அலையால் உயிரிழப்பு என்பதைவிட மழை நிகழ்வுகளால் இறப்பு என்பதே அதிகளவில் ஏற்பட்டு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்தார்.

    Next Story
    ×