என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை: மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன
    X

    நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை: மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன

    • மழையால் ஊட்டியில் உள்ள பல்வேறு சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்தது.

    இதனை தொடர்ந்து மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்தது. மேலும் மாநில பேரிடர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.

    கனமழை எச்சரிக்கையால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டது. சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன.

    இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு பிறகு ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இந்த மழையால் ஊட்டியில் உள்ள பல்வேறு சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஊட்டி ரெயில்வே பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கி நின்றது. அப்போது அந்த வழியாக சென்ற கார் ஒன்று வெள்ளத்தில் சிக்கி கொண்டது.

    தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் காரை மீட்டனர். ஊட்டி கார்டன் சாலை மழையால் சேறும், சகதியுமாக மாறியது. படகு இல்ல சாலையை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனால் அந்த பகுதிகளில் செல்லக்கூடிய நகர பஸ்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன. ரெயில் நிலையம் அருகே உள்ள போலீஸ் நிலையத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் ஊட்டி மார்க்கெட் பகுதிக்குள்ளும் மழைநீர் புகுந்தது.

    காலையில் மழை இல்லாததால் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா திறக்கப்பட்டது. ஆனால் கனமழை பெய்ய தொடங்கியவுடன் பூங்காக்கள் உடனடியாக மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

    குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. குன்னூர் லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் செல்லும் சாலையில் மரம் விழுந்தது. கோத்தகிரி அருகே உள்ள செம்மனாரை கிராமத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது.

    இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் அந்த பகுதிகளுக்கு சென்று மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். பந்தலூரில் கொட்டி தீர்த்த கனமழைக்கு எருமாடு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓவேலியில் 4 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தில் பதிவான மழை விவரம் மி.மீட்டரில் வருமாறு:-

    ஓவேலி-49, போர்த்திமந்து-47, பார்சன்வேலி-46, கீழ்கோத்தகிரி-45, தேவாலா-37, ஊட்டி-37.1, பந்தலூர்-30, நடுவட்டம்-25, சேரங்கோடு-22.

    Next Story
    ×