என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந்தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நேற்று தமிழ்நாட்டில் சென்னை உள்பட அனேக இடங்களில் மழை பெய்தது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடிக்கிறது. தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று பிற்பகலில் தென் மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வட தமிழக, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
அதற்கடுத்து மேலும் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, நாளை வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு வந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சென்னை, புதுக்கோட்டை, சேலம், பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் காலையில் இருந்து கனமழை வெளுத்து வாங்க தொடங்கியது. சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.






