என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஐ.பி.எல். போட்டி போல் கிடையாது: ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
    X

    ஐ.பி.எல். போட்டி போல் கிடையாது: ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    • ஜல்லிக்கட்டு போட்டிகளை சில தனிநபர்கள் நடத்தியதின் காரணமாகவே பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது.
    • பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் அவனியாபுரத்தை சேர்ந்த முருகன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அவனியாபுரம் கிராமத்தில் தை மாதம் முதல் நாள் (15-ந்தேதி) தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழா நடைபெறும்.

    இது கடந்த 100 ஆண்டுக்கும் மேலாக கிராம பொதுமக்கள் சார்பாக நடப்பது வழக்கம். மேலும் கடந்த 2017-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி அளித்த பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவினை நடத்த தென்கால் கண்மாய் பாசன விவசாயிகள் பிரதான ஜல்லிக்கட்டு சங்கம் என்ற தனிநபர் சங்கத்தினை புதிதாக உருவாக்கி ஒரு குடும்பத்தைச் சார்ந்த நபர்கள் மட்டும் மேற்படி விழாவினை ஆக்கிரமிப்பு செய்து ஜல்லிக்கட்டு விழாவை நடத்தினார். அதற்கு ஆட்சேபனை தெரிவித்து மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    ஐகோர்ட் உத்தரவில் மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு விழாவை நடத்தவும் அதில் 16 பேர் கொண்ட ஆலோசனை குழு சேர்த்து நடத்த உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி வருகிறது.

    எனவே வருகிற 15-ந் தேதியன்று நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை நடத்த, அவனியாபுரம் கிராமம் மற்றும் அனைத்து சமுதாய பிரதிநிதிகள் அடங்கிய கிராம பொது கமிட்டிக்கு ஜல்லிக்கட்டு விழாவினை நடத்த அனுமதி வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தோம். நடவடிக்கை இல்லை.

    மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது. எனவே அவனியாபுரம் கிராமம் மற்றும் அனைத்து சமுதாய பிரதிநிதிகள் அடங்கிய கிராம பொது கமிட்டிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு பிறப்பித்த உத்தரவில் ஜல்லிக்கட்டு போட்டி ஐ.பி.எல். விளையாட்டு கிடையாது. பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

    ஜல்லிக்கட்டு போட்டிகளை சில தனிநபர்கள் நடத்தியதின் காரணமாகவே பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது. எனவே இதனை அரசு நடத்துவது தான் நல்லது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்கள் மிகவும் உலகப் புகழ்பெற்றது இவ்வாறு உள்ள சூழலில் இந்த விழாக்களை தனி நபர்கள் நடத்துவது பொருத்தமாக இருக்காது. எனவே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசு நிர்வாகமே நடத்துவது தான் சரியாக இருக்கும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

    Next Story
    ×