என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்திருந்த 10 மசோதாக்களும் சட்டமானதாக அரசிதழ் வெளியீடு
    X

    ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்திருந்த 10 மசோதாக்களும் சட்டமானதாக அரசிதழ் வெளியீடு

    • 10 மசோதாக்களையும் நிறைவேற்றுவது தொடர்பாக கடந்த சில தினங்களாக தமிழ்நாடு அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்
    • இந்த தீர்ப்புகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருந்தார். அந்த வகையில் 10 மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டன.

    இதற்கிடையே 2 மசோதாக்களை அவர் ஜனாதிபதி பார்வைக்கு அனுப்பி வைத்திருந்தார். இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்து சமீபத்தில் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டனர். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நீண்டகாலம் நிலுவையில் வைத்திருந்தது சட்ட விரோதம் என்று தீர்ப்பு அளித்தனர்.

    அதோடு ஆளுநர் வசம் உள்ள 10 மசோதாக்களையும் அரசிதழில் வெளியிட்டு நிறைவேற்றலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு மூலம் ஆளுநருக்கு எதிரான நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. 415 பக்கங்கள் கொண்ட அந்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து 10 மசோதாக்களையும் நிறைவேற்றுவது தொடர்பாக கடந்த சில தினங்களாக தமிழ்நாடு அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். தற்போது அந்த மசோதாக்களை தமிழ்நாடு அரசு சட்டமாக்கி அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    10 மசோதாக்களையும் ஆளுநர், ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுடன், அம்மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக கருதவேண்டும் என தீர்ப்பு வழங்கியது

    இதனை அடுத்து, தமிழ்நாடு அரசு அம்மசோதாக்களை அனுப்பிய 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ந் தேதியில் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்ததாக கருத வேண்டும் என அரசிதழில் தெரிவித்துள்ளது.

    இந்த தீர்ப்புகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்த தீர்ப்பு உடனடியாக சட்டமானது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×