என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஊட்டி மலை ரெயிலை வழிமறித்த யானை
- மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி மலை ரெயில் புறப்பட்டு வந்தது.
- யானை தண்டவாளத்தை விட்டு நகராமல் சிறிது நேரம் அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்தது.
குன்னூர்:
மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், சிறுமுகை ஆகிய சமவெளி பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் காட்டு யானைகள் உணவு தட்டுப்பாடு காரணமாக நீலகிரி மாவட்டத்தை நோக்கி படையெடுத்து வருகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலைக்கு இடம்பெயர்ந்து வந்த ஒரு காட்டு யானை குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, கே.என்.ஆர்., மரப்பாலம் ஆகிய பகுதிகளில் முகாமிட்டு வந்தது.
அந்த யானை இன்று காலை மரப்பாலம் பகுதிக்கு வந்தது. பின்னர் அங்குள்ள தண்டவாள பகுதியில் சுற்றி திரிந்தது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி மலை ரெயில் புறப்பட்டு வந்தது. அப்போது மரப்பாலம் பகுதியில் தண்டவாள பாதையில் ஒற்றை காட்டு யானை நிற்பது தெரிய வந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில் பைலட் உடனடியாக பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினார். அதன்பிறகும் அந்த யானை தண்டவாளத்தை விட்டு நகராமல் சிறிது நேரம் அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்தது. பின்னர் ஒருவழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதன்பிறகு மேட்டுப்பாளையம் மலை ரெயில் மீண்டும் புறப்பட்டு குன்னூரை நோக்கி சென்றது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் வழியில் மரப்பாலம் பகுதி தண்டவாளத்தில் நின்றிருந்த காட்டு யானையை சுற்றுலா பயணிகள் ஆர்வம் கலந்த அதிர்ச்சியுடன் கண்டு மகிழ்ந்தனர்.






