என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடலூர்-பண்ருட்டி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்
- மாலை 7 மணி அளவில் திருவதிகை ஆயில் மில், திருவதிகை எம்.ஜி.ஆர். சிலை ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
- கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கலைக்குழுவினர் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கடலூர்:
முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற எழுச்சி நோக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று முன்தினமும், நேற்றும் அவர் விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். இன்று (சனிக்கிழமை) அவர் கடலூர், பண்ருட்டி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதையொட்டி இன்று மாலை 4 மணியளவில் புதுச்சேரியில் இருந்து வரும் அவருக்கு கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம் .சி. சம்பத் தலைமையில் கடலூர் மாவட்ட எல்லையான, ரெட்டிச்சாவடியிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் மஞ்சக்குப்பம் எம்.ஜி.ஆர்.சிலை அருகிலும், தொடர்ந்து டவுன்ஹால் அருகிலும் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர், 4.45 மணி அளவில் மஞ்சக்குப்பத்தில் ரோடுஷோவாக சென்று மக்களை சந்திக்கிறார். அதன்பிறகு, சீமாட்டி சிக்னல் அருகில் சிறப்புரையாற்றுகிறார்.
இதனை தொடர்ந்து பண்ருட்டி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த நெல்லிக்குப்பம் அம்பேத்கர் சிலை அருகிலும், மேல்பட்டாம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகிலும், அண்ணா கிராமம் அம்பேத்கர் சிலை அருகிலும் சிறப்புரையாற்றுகிறார். மாலை 7 மணி அளவில் திருவதிகை ஆயில் மில், திருவதிகை எம்.ஜி.ஆர். சிலை ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதன்பிறகு இரவு 7.30 மணி அளவில் பண்ருட்டி 4 முனை சந்திப்பு அருகில் பேசுகிறார். இதையடுத்து நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில் கடலூர் நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், அண்ணா கிராமம் பண்ருட்டி நெய்வேலி ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலைகளில் ஆயிரக்கணக்கான கட்சி கொடிகள் வழி நெடுக்கிலும் பல கிலோ மீட்டர்கள் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அ.தி.மு.க.வினர் வழி நெடுகிலும் பெரிய அளவிலான பேனர்கள் வைத்து வரவேற்று உள்ளனர். இது மட்டும் இன்றி மதியம் முதல் கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கலைக்குழுவினர் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதன் காரணமாக கடலூர், பண்ருட்டி, நெய்வேலி ஆகிய பகுதிகள் முழுவதும் விழா கோலம் பூண்டு உள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமியை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வரவேற்க உள்ளனர்.






