என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி பழனிசாமி சென்னையில் ஜனவரி மாதம் சுற்றுப்பயணம்
- இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதமோ எடப்பாடி பழனிசாமி தனது 6-வது கட்ட பிரசாரத்தை தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளார்.
- குமரி மாவட்டம் மற்றும் மீதமுள்ள மற்ற இடங்களிலும் எடப்பாடி பழனிசாமி அதற்கு முன்னதாக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி பிரசாரத்தை தொடங்கினார்.
கோவையில் தொடங்கிய இந்த பிரசாரம் தஞ்சையில் ஜூலை 27-ந் தேதி முடிவடைந்தது. இதன் பின்னர் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி 5 கட்டங்களாக பிரசாரம் மேற்கொண்டார். இதுவரை 174 தொகுதியில் அவர் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.
மீதம் உள்ள 60 தொகுதிகளிலும் அடுத்த கட்டமாக பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்த மாத இறுதியிலோ, அல்லது அடுத்த மாதமோ எடப்பாடி பழனிசாமி தனது 6-வது கட்ட பிரசாரத்தை தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் நாட்களில் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த மாதமும் அடுத்த மாதமும் சென்னை உள்பட தமிழகத்தின் மற்ற இடங்களிலும் மழை பொழிவு எப்படி இருக்கும்? என்பதை அலசி ஆராய்ந்த பிறகே எடப்பாடி பழனிசாமியின் 6-வது கட்ட பிரசாரத்தை திட்டமிடுவதற்கு அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை காலம் ஓய்ந்த பிறகு பிரசாரம் செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
இதனால் ஜனவரி முதல் வாரத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னையில் பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறினார்.
அதே நேரத்தில் குமரி மாவட்டம் மற்றும் மீதமுள்ள மற்ற இடங்களிலும் எடப்பாடி பழனிசாமி அதற்கு முன்னதாக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார். அதற்கு ஏற்ப பிரசார திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.






