என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கடலூர்-பண்ருட்டி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் - விவசாயிகளுடன் கலந்துரையாடல்
    X

    கடலூர்-பண்ருட்டி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் - விவசாயிகளுடன் கலந்துரையாடல்

    • நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
    • விவசாயிகள், வியாபாரிகள், வர்த்தக சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற எழுச்சி நோக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    நேற்று முன்தினமும், நேற்றும் அவர் விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். இன்று அவர் கடலூர், பண்ருட்டி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதையொட்டி இன்று மாலை 4 மணியளவில் புதுச்சேரியில் இருந்து வரும் அவருக்கு கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம் .சி. சம்பத் தலைமையில் கடலூர் மாவட்ட எல்லையான, ரெட்டிச்சாவடியிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் மஞ்சக்குப்பம் எம்.ஜி.ஆர்.சிலை அருகிலும், தொடர்ந்து டவுன்ஹால் அருகிலும் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர், 4.45 மணி அளவில் மஞ்சக்குப்பத்தில் ரோடுஷோவாக சென்று மக்களை சந்திக்கிறார். அதன்பிறகு, சீமாட்டி சிக்னல் அருகில் சிறப்புரையாற்றுகிறார்.

    இதனை தொடர்ந்து பண்ருட்டி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த நெல்லிக்குப்பம் அம்பேத்கர் சிலை அருகிலும், மேல்பட்டாம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகிலும், அண்ணா கிராமம் அம்பேத்கர் சிலை அருகிலும் சிறப்புரையாற்றுகிறார். மாலை 7 மணி அளவில் திருவதிகை ஆயில் மில், திருவதிகை எம்.ஜி.ஆர். சிலை ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அதன்பிறகு இரவு 7.30 மணி அளவில் பண்ருட்டி 4 முனை சந்திப்பு அருகில் பேசுகிறார். இதையடுத்து நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    இந்த நிலையில் கடலூர் நெல்லிக்குப்பம், மேல்பட்டாம் பாக்கம், அண்ணா கிராமம் பண்ருட்டி நெய்வேலி ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலைகளில் ஆயிரக்கணக்கான கட்சி கொடிகள் வழி நெடுக்கிலும் பல கிலோமீட்டர்கள் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அ.தி.மு.க.வினர் வழி நெடுகிலும் பெரிய அளவிலான பேனர்கள் வைத்து வரவேற்று உள்ளனர். இது மட்டும் இன்றி மதியம் முதல் கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கலைக்குழுவினர் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதன் காரணமாக கடலூர், பண்ருட்டி, நெய்வேலி ஆகிய பகுதிகள் முழுவதும் விழா கோலம் பூண்டு உள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமியை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வரவேற்க உள்ளனர்.

    நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி புதுவை மாநிலம் பூரணாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

    அவர் இன்று அந்த விடுதிக்கு கடலூர் மாவட்ட விவசாயிகளை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடினார். இதில் விவசாயிகள், வியாபாரிகள், வர்த்தக சங்கத்தினர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களது குறைகளை தெரிவித்தனர். மனுக்களும் கொடுத்தனர்.

    இதில் கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.சி.சம்பத் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×