என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சி மலர என்னோடு இணையுங்கள்- எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு அழைப்பு
- ‘மக்களைக் காப்போம்-தமிழகத்தை மீட்போம்’ என்கிற எழுச்சிப் பயணத்தில் உங்களை எல்லாம் சந்தித்து உறவாட வருகிறேன்.
- திமுக அரசு அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமல்லவா?
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
என்னுள் கலந்திருக்கும் எனதருமைத் தமிழக மக்களே, உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் ஓர் இனிய செய்தியைச் சொல்லவே இந்தக் கடி தத்தை எழுதுகிறேன். என்னைப் பற்றி எல்லாமும் உங்களுக்குத் தெரியும். என்னிடம் எந்த ரகசியமும் இல்லை.
என் உயிருக்கு நெருக்கமான உறவாக இருக்கின்ற உங்களோடு இருக்கவே நான் எப்போதும் ஆசைப்படுபவன். சாமானியனிலும் சாமானியனாக உங்களோடு கலந்து உறவாட விரும்புகிறவன். தமிழ்க்குடியினர் அனைவரும் தலைநிமிர்ந்து செம்மாந்து வாழ்வதற்கு எனது செயல்கள் அனைத்தையும் அர்ப்பணிக்க நினைப்பவன்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அமைத்துக் கொடுத்த லட்சியப் பாதையில் தமிழ்நாட்டை வழி நடத்த வேண்டும் என நித்தமும் உழைப்பவன். எனது தனிப்பட்ட வாழ்வும் அரசியல் வாழ்வும் வெவ்வேறானவை அல்ல. அவை ஒன்றோடு ஒன்று கலந்தவை என்பதை எனது நெஞ்சகத்தை அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.
* 'மக்களைக் காப்போம்-தமிழகத்தை மீட்போம்' என்கிற எழுச்சிப் பயணத்தில் உங்களை எல்லாம் சந்தித்து உறவாட வருகிறேன்.
* இந்தப் புரட்சிப் பயணத்தில் உங்களை எல்லாம் எழுச்சிமிக்கவர்களாக மாற்றுவது மட்டுமே எனது நோக்கம். வெற்றிகரமான ஒரு தமிழ்நாட்டை மீண்டும் உருவாக்குவதே எனது இந்தச் சுற்றுப் பயணத்தின் லட்சியம்.
* உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்களோடு உறவாடி நிற்பேன். உங்கள் குறைகளையும் கோரிக்கைகளையும் காதுகொடுத்துக் கேட்கும் சேவகனாக இருப்பேன்.
தமிழ்நாட்டு மக்களைத் தேடி வரும் இந்த எழுச்சிப் பயணம், உங்கள் பங்களிப்போடு ஒரு மாற்றத்தை நோக்கிய வெற்றிப் பயணமாக மாறும் என்பதில் எள் முனையளவும் எனக்கு சந்தேகமில்லை.
இந்த ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர், தொழிலாளர்கள் என்று அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொழில் முதலீடு அண்டை மாநிலங்களுக்கு மாறுகிறது. இந்த அரசு, அனைத்துத் துறைகளிலும் தோல்வியையே கண்டு உள்ளது. எனவே, திமுக அரசு அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமல்லவா?
சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை எவரும் தமிழ்நாட்டில் பாதுகாப்போடு நடமாடமுடியவில்லை. சிறுவர்களைச் சிதைக்கிற பெருங்குற்றங்கள் அதிகரித்து விட்டன. முதியோர்கள் உயிரைத் தொடர்ச்சியாகப் பறிக்கிற ஈவு இரக்கமற்ற செயல்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
தி.மு.க. அரசாங்கம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியில்கூட அரசியல் செய்கிறது. போலி வாக்குறுதிகளைக் கொடுத்து பொய்யான ஆட்சி நடத்துகிறது. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப, உங்களை எல்லாம் என்னோடு இணைந்து வர அழைக்கிறேன்.
அமைதியான தமிழ்நாடு, வளமான தமிழ்நாடு, நிறைவான தமிழ்நாடு, இவைதான் நமது லட்சியம். நாம் வெல்வது நிச்சயம்! விலகாத இருள் விலகட்டும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மலரட்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.