என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தொட்டபெட்டாவில் காட்டு யானையின் நடமாட்டம் டிரோன் மூலம் கண்காணிப்பு - சுற்றுலா பயணிகளுக்கு தடை
- யானை எங்கிருக்கிறது என தேடியபோது, இரவில் அந்த யானை ஊட்டி நகருக்குள் புகுந்த தகவல் வந்தது.
- அதிநவீன டிரோன் காமிரா மூலம் யானை இருக்கும் இடத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் பர்லியார் மலைப்பாதையில் சுற்றி திரிந்த 8 வயது மதிக்கத்தக்க காட்டு யானை, அங்கிருந்து 15 கி.மீ தூரம் கடந்து, தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு நேற்று முன்தினம் வந்தது.
யானை வந்த தகவலை அறிந்ததும் வனத்துறையினர் உடனே அங்கு சென்று அங்கிருந்த சுற்றுலா பயணிகளையும், வியாபாரிகளையும் வெளியேற்றினர்.
மேலும் நேற்று தொட்டபெட்டா மலைசிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டது. அந்த தடையானது இன்றும் நீடிக்கிறது.
யானை எங்கிருக்கிறது என தேடியபோது, இரவில் அந்த யானை ஊட்டி நகருக்குள் புகுந்த தகவல் வந்தது. உடனடியாக வனத்துறையினர் அங்கு வந்து யானையை விரட்ட முயன்றனர். ஆனால் யானை அங்குள்ள முக்கிய வீதிகளில் சுற்றி திரிந்ததால் வனத்திற்குள் விரட்ட முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்தனர். இதற்கிடையே யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தமிழக வனத்துறை முதன்மை தலைமை பாதுகாவலர் அனுமதி வழங்கினார். இதனால் வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் உதவியுடன் அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தனர்.
ஆனால் இரவில் சுற்றிய யானை காலையில் எங்கு சென்றது என்பது தெரியததால் அதனை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
இந்த பணியில் மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமையில், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து யானைகளை கட்டுப்படுத்தும் சிறப்பு பயிற்சி பெற்ற பழங்குடியினர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், யானை விரட்டும் குழுவினர், கால்நடை மருத்துவ குழு, வனத்துறையினர் என 60 பேர் ஈடுபட்டனர். அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் யானையை கண்காணித்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு யானை தொட்டபெட்டா மலைசிகரத்தில் தென்பட்டது. அங்கிருந்து வெளியேறிய யானை, தொட்டபெட்டா நான்கு ரோடு சாலைக்கு வந்தது.
வனத்துறையினர் விரைந்து வந்து ஊட்டி-கோத்தகிரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்தை நிறுத்தி, யானைக்கு மயக்க ஊசி செலுத்த முடிவு செய்தனர். ஆனால் யானை, அருகே உள்ள செடிகளுக்குள் சென்று மறைந்தது. இதனால் மயக்க ஊசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அதற்குள் யானை அங்கிருந்து வேறுபகுதிக்கு சென்றது.இதையடுத்து வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டார். அதிநவீன டிரோன் காமிரா மூலம் யானை இருக்கும் இடத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட வனபாதுகாவலர் கவுதம் கூறும்போது, யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது யானை இருக்கும் இடத்தை டிரோன் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யானை நடமாட்டம் இருப்பதால் இன்றும் தொட்டபெட்டா மலைசிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.






