என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இன்னும் 3 அமாவாசையில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும்: திருப்போரூரில் இ.பி.எஸ். சபதம்
    X

    இன்னும் 3 அமாவாசையில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும்: திருப்போரூரில் இ.பி.எஸ். சபதம்

    • தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்துவேன் என்றார் ஸ்டாலின். அப்படி உயர்த்தினாரா? பொய்.
    • ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என்றார், அதுவும் செய்யவில்லை.

    அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொண்டு 5 கட்டங்களில் 175 தொகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து எழுச்சிப்பயணம் மேற்கொண்டார்.

    ஆறாவது கட்டமாக இன்று திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட கேளம்பாக்கம், ராஜீவ்காந்தி ஐடி எக்ஸ்பிரஸ் சாலையில் அமைந்திருக்கும் இஜ்திமா திடலில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இபிஎஸ் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திமுக-வை தீய சக்தி என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சொன்னார், அந்த திமுகவை அகற்றவே அதிமுகவை தோற்றுவித்தார். அந்த லட்சியத்தைக் கட்டிக்காத்தவர் புரட்சித்தலைவி அம்மா. இருபெரும் தலைவர்களின் லட்சியமும் திமுகவை அகற்றுவதுதான்.

    கள்ளக்குறிச்சி அரசு விழாவில் இந்த எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால் விட்டார். திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முடியப்போகிறது. திமுக ஆட்சியை அகற்றுவதற்கு இன்னும் 3 அமாவாசைகள் தான் இருக்கின்றன. அதிமுக ஆட்சியில் 5% பணிகள்தான் நிறைவேற்றப்பட்டதாம்.

    ஸ்டாலின் பேசிய கள்ளக்குறிச்சியே அதிமுக ஆட்சியில்தான் உதயமானது. காஞ்சிபுரம் மக்கள் கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டை புதிய மாவட்டமாக உருவாக்கியது அதிமுக. மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டுத்தான் நாங்கள் மக்களை சந்திக்கிறோம், அதிமுக ஆட்சியில் 5% அல்ல, 95% வாக்குறுதிகள் நிறைவேற்றியிருக்கிறோம். ஆனால், திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததில் 5% மட்டுமே நிறைவேற்றியுள்ளது.

    கள்ளக்குறிச்சி மக்கள் கோரிக்கையை ஏற்று மாவட்டம் தொடங்கி புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்தோம். செங்கல்பட்டுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டினோம். விவசாயிகளுக்கு ஏராளமான திட்டம் கொடுத்தோம்.

    தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்துவேன் என்றார் ஸ்டாலின். அப்படி உயர்த்தினாரா? பொய். இன்று மத்திய அரசு அதிமுக கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் 125 நாளாக உயர்த்தியிருக்கிறது. ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என்றார், அதுவும் செய்யவில்லை. 100 நாள் வேலையும் கொடுக்காத அரசு திமுக அரசு. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 125 நாள் என்பது 150 நாளாக உயர்த்தியும், சம்பளமும் உயர்த்தி வழங்கப்படும், தடையில்லாமல் வேலை வழங்கப்படும். இதுதான் அதிமுகவின் லட்சியம்.

    100 நாள் வேலைத்திட்டம் குறித்து ஸ்டாலின் தவறான அவதூறைப் பரப்புகிறார், திட்டம் ரத்து செய்யப்படுவதாக பச்சைப்பொய் சொல்கிறார்.

    125 நாளாக உயர்த்தியதை 150 நாளாக உயர்த்துவதற்கு கோரிக்கை வைத்து நிறைவேற்றுவோம். அதிமுக ஆட்சி அமைந்ததும். ஒரு அரசு எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக செயல்படும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    Next Story
    ×