என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கருத்து வேறுபாடு என்பது ஜனநாயக உரிமை - சவுக்கு சங்கர் ஜாமின் வழக்கில் நீதிபதிகள் கருத்து
- புகார் செய்த அடுத்த நாள் அதிகாலையிலேயே சவுக்கு சங்கரை கைது செய்ததன் நோக்கம் என்ன?
- கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துபவர்கள் யாராவது துன்புறுத்தப்பட்டால், நீங்கள் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுகிறீர்கள் என்று அர்த்தம்.
யூடியூபர் சவுக்கு சங்கர் தான் பேசும் வீடியோக்களில் தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும், திமுகவையும் விமர்சித்து வருகிறார். அதற்காக அவ்வப்போது அவதூறு வழக்குகள் போடப்பட்டு, கைது செய்யப்பட்டு, பின் வெளிவருவது என்பதை வாடிக்கையாக வைத்துவருகிறார்.
இந்நிலையில் சென்னை நந்தனம் பகுதியில் ஹரிச்சந்திரன் என்ற பார் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியதாக சவுக்கு சங்கர்மீது புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் கடந்தவாரம் போலீசார் சவுக்கு சங்கரை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
இதனையடுத்து சவுக்கு சங்கரின் தாயார், சவுக்கின் உடல்நிலையை கருத்தில்கொண்டு அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கவேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் பி.தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கருக்கு 2025 டிசம்பர் 26 முதல் 2026 மார்ச் 25 வரை இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் சவுக்கு சங்கர் தன்னிடம் உள்ள பாஸ்போர்ட்டை காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்கும் நோக்கில் சவுக்கு சங்கர் செயல்படக்கூடாது என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அறிவுறுத்தினார்.
இதனிடையே தீர்ப்பின் போது பேசிய நீதிபதிகள், யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்வதில் போலீசாருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம். புகார் செய்த அடுத்த நாள் அதிகாலையிலேயே சவுக்கு சங்கரை கைது செய்ததன் நோக்கம் என்ன? நீங்கள் ஏன் செய்தியாளர்களுக்கு பின்னால் ஓடுகிறீர்கள்? கருத்து வேறுபாடு என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும். சட்டமன்றத்தில் கருத்து வேறுபாடு மதிக்கப்படுகிறது. கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துபவர்கள் யாராவது துன்புறுத்தப்பட்டால், நீங்கள் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுகிறீர்கள் என்று அர்த்தம்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நபர்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்பினால், அவர்கள் அவதூறு வழக்கு மூலம் சிவில் நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவை பெறலாம். அதற்கு உங்களை யாரும் தடுக்க முடியாது. தனி நபர் சுதந்திரம் என்ற விஷயத்தைத் தொட்டால் அது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளில் தலையிடுவதாக அமைந்துவிடும்.
அதிகாரிகளின் நன்மதிப்பை இழந்த குறிப்பிட்ட நபர்களைக் குறிவைக்க சட்டத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது. தனிநபருக்கு எதிராக தொடர்ச்சியாகக் காட்டப்படும் கடுமையான நடவடிக்கைகள், நாட்டின் குடிமக்களுக்கு சரியான செய்தியை அனுப்பாது. அதிகாரிகளின் துஷ்பிரயோகம் மூலம் சவுக்கு சங்கரை துன்புறுத்தியது மட்டுமல்லாமல், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளனர். அனைத்து காரணிகையும் கருத்தில் கொண்டு சவுக்கு சங்கர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது. சாட்சிகளுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது" எனத் தெரிவித்தனர்.






