என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நீலகிரியில் மீண்டும் சூறாவளி காற்றுடன் மழை - லவ்டேல் பகுதியில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
- 2 நாள் மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் நீலகிரியில் மழை பெய்ய தொடங்கியது.
- ஒரு மணி நேரத்திற்கு பின்பு போக்குவரத்து தொடங்கியது.
ஊட்டி:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்னரே வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்தது. மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன், மண் சரிவுகளும் ஏற்பட்டது.
மழையின் தாக்கம் அதிகரித்ததால், சுற்றுலா தலங்களும் மூடப்பட்டிருந்தது. இதனால் கோடைசீசன் பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்து விட்டது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீலகிரியை மழை மிரட்டி வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் மழை சற்று குறைந்து இருந்தது. மிதமான வெயில் அடிக்க தொடங்கியதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
இந்த நிலையில் 2 நாள் மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் நீலகிரியில் மழை பெய்ய தொடங்கியது.
ஊடடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான குந்தா, காந்தல் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் காற்றுடன் கூடிய லேசான சாரல் மழை பெய்தது.
சூறாவளி காற்றுக்கு ஊட்டி-மஞ்சூர் சாலையில் லவ்டேல் பகுதியில் சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அப்பகுதிக்கு சென்று மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். ஒரு மணி நேரத்திற்கு பின்பு அங்கு போக்குவரத்து தொடங்கியது.
தொடர்ந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக ஊட்டி-மஞ்சூர் சாலையில் லவ்டேல் முதல் காந்திப்பேட்டை வரை மரங்கள் விழும் அபாயம் இருக்கிறது.
சாரல் மழையால் காலநிலை மாறி குளிர் அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சுவர்ட்டர் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து கொண்டனர். சாரல் மழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் மலை காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் காட்டேரி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து அணை நிரம்பியது.இதனை தொடர்ந்து அணை திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த நீர் காட்டேரி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனை ஊட்டிக்கு சுற்றுலா வரக்கூடிய பயணிகள் காரில் இருந்தபடியே பார்த்து ரசித்து செல்கின்றனர்.






