என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தொடர் போராட்டம் - தூய்மை பணியாளர்கள் 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
- பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- கைது செய்யப்பட்ட அனைவரையும் வீட்டிற்கு செல்லுமாறு கூறியும் அவர்கள் சமுதாய கூடத்தை விட்டு வெளியேறாமல் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:
கடந்த சில மாதங்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகையை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து பெரியமேடு, வேப்பேரி, உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 33 பெண்கள் 12 ஆண்கள் உட்பட 45 தூய்மை பணியாளர்களை கைது செய்து கண்ணப்பர் திடல் சமுதாய கூடத்தில் அடைத்து வைத்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் வீட்டிற்கு செல்லுமாறு கூறியும் அவர்கள் சமுதாய கூடத்தை விட்டு வெளியேறாமல் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அனைவரையும் நேற்று இரவு கண்ணப்பர் திடல் சமுதாய கூடத்தில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அப்போது சரஸ்வதி, நிர்மலா, மகேஸ்வரி, தனலட்சுமி ஆகிய 4 தூய்மை பணியாளர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சக தூய்மை பணியாளர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை கே.எம்.சி. மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டும் என போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால் போலீஸார் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் நிறுத்தாமல் நேராக கோயம்பேடு நோக்கி சென்றதால் ஆத்திரமடைந்த தூய்மை பணியாளர்கள் பஸ்சிலேயே கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மற்ற தூய்மை பணியாளர்களும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று அவர்களுக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.






