என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை கொளத்தூர், பழனி, நெல்லையில் முதியோர் காப்பகம் - முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
- மாற்றுத்திறனாளி பிரியவதனா என்பவருக்கு பெண் ஓதுவாருக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
- கண் பரிசோதனை செய்து கொண்ட 100 பேருக்கு இலவச கண்ணாடி ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் 6 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
முதலாவது நிகழ்ச்சியாக ராஜாஜி நகரில் முதியோர்கள் தங்கும் உறைவிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கொளத்தூர் தொகுதியில் ரூ.8.88 கோடி மதிப்பீட்டில் மூத்த குடிமக்கள் தங்கும் உறைவிடம், பழனி தண்டாயுதபாணி கோவில் சார்பாக ரூ.8.48 கோடி செலவிலும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் சார்பாக ரூ.5.25 கோடி செலவிலும் முதியோர் தங்கும் இடத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். மொத்தம் 22.61 கோடி மதிப்பீட்டில் இந்த 3 உறைவிடங்களுக்கான பணிகள் தொடங்கியுள்ளனர்.
இந்த மூத்தக் குடிமக்கள் உறைவிடங்களில் வரவேற்பறை, குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய தங்கும் அறைகள், உணவருந்தும் அறை, பல்நோக்கு அறை, சமயலறை, பார்வையாளர்கள் அறை, நூலகம், அவசர ஊர்தியுடன் கூடிய மருத்துவ மையம், நடைபாதை வசதிகளுடன் கூடிய சிறு பூங்கா, பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படுகின்றன.
இந்த விழாவில் மாற்றுத் திறனாளி பிரியவதனா என்பவருக்கு பெண் ஓதுவாருக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி பாடல் ஒன்றை பாடினார்.
இதைத்தொடர்ந்து வி.கே.எம். காலனியில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் படித்த 350 மாணவ-மாணவிகளுக்கு தையல் எந்திரம் 131 பேருக்கு லேப்டாப் மற்றும் கண் பரிசோதனை செய்து கொண்ட 100 பேருக்கு இலவச கண்ணாடி ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து ரூ. 4.36 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட ஜெனரல் குமாரமங்கலம் குளம் மற்றும் பூங்கா ஆகியவற்றை முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் நடந்த விழாவில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் 318 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து பெரியார் நகர் மெட்ரிகுலேஷன் பள்ளி விளையாட்டு மைதானத்தில் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
குமரன் நகர் 80 அடி சாலையில் புதுப்பிக்கப்பட்ட தணிகாசலம் நகர் கால்வாயை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
கொளத்தூர் தொகுதியில் இன்று ஒரே நாளில் 6 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். வழிநெடுக சாலையின் இருபுறமும் நின்று பெண்கள் முதலமைச்சரை வரவேற்று வாழ்த்து கோஷமிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, எம்.பி.க்கள் கிரிராஜன், கலாநிதி வீராசாமி, மேயர் பிரியா, தாயகம் கவி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. பா. ரங்கநாதன், பகுதி செயலாளர் ஐ.சி.எப். முரளி நாகராஜன், மண்டல தலைவர் சரிதா, நிர்வாகிகள் சந்துரு, மகேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.






