என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கருப்பு  சட்டத்தை எதிர்ப்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    கருப்பு சட்டத்தை எதிர்ப்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • அ.தி.மு.க வுக்கு இரட்டை நிலைப்பாடு என்பது சாதாரணமானது.
    • சிறுபான்மை சமுதாய மக்களுக்கு எப்போதும் தி.மு.க. துணை நிற்கும்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் தி.மு.க அமைச்சர் ரகுமான் கான் எழுதிய 5 நூல்கள் மற்றும் இடி முழக்கம் சட்டமன்ற பேரூரைகள் நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் இந்த நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பெற்றுக்கொண்டார்.

    ரகுமான் கான் பேச்சுக்கு ரசிகன் நான். அவர் சட்டமன்றத்தில் பேசியதை எவ்வளவோ சொல்ல முடியும். ரகுமான் கானின் பேச்சு சட்டமன்றத்தில் இடி முழக்கமாகவும், தமிழ்நாடு முழுவதும் வெடிமுழக்கமாகவும் எதிரொலித்தது.

    தலைவர் கலைஞரை பொறுத்தவரை ஒரு திறமைசாலியை கண்டார் என்றால் அவர்களை அரவணைத்து வளர்த்திடுவார். அந்த வகையில் ரகுமான் கான் இறுதி மூச்சு வரை கழக காவலராக இருந்தவர்.

    இன்றைக்கும் நமது நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தன்னுடைய கட்சிக்கு வருமாறு ரகுமான்கானை அழைத்தார். ஆனால் சின்ன சஞ்சலம் கூட இல்லாமல் கொள்கை உறுதியோடு தி.மு.க.வில் ரகுமான்கான் இருந்தார். சட்டமன்றத்தில் ரகுமான் கான் எப்படியெல்லாம் செயல்பட்டார் என இன்றைக்கு தெரிந்து கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த சமயங்களில் சட்டமன்றத்தில் கழகத்தை காப்பாற்றிய எம்.எல்.ஏ.க்களில் முக்கியமான 3 பேரை சொல்ல வேண்டுமானால் துரைமுருகன், சுப்பு, ரகுமான் கான் ஆகிய மூவரை இன்றைக்கும் வரலாறு சொல்லும்.

    இந்த 3 பேரையும் இடி, மின்னல், மழை என சொல்லலாம். இந்த 3 பேரும் கேள்வி எழுப்பினால் சட்டமன்றமே அதிரும். அ.தி.மு.க. ஒரு விஷயத்தில் அப்போது இரட்டை நிலைப்பாட்டை எடுத்தது.

    எப்போதுமே அ.தி.மு.க வுக்கு இரட்டை நிலைப்பாடு என்பது சாதாரணமானது. இது பற்றி ரகுமான் கான் சட்டமன்றத்தில் என்ன சொன்னார் என்றால் சின்னம் இரட்டை இலை. அதனால் இரட்டை போக்கு என்று சொன்னார். அதற்கு அப்போது யாராலும் பதில் சொல்ல முடியவில்லை

    நேற்று பாராளுமன்றத்தில் நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்த புலனாய்வு அமைப்புகளை வைத்து தங்களுக்கு எதிரானவர்களை பதவி நீக்கம் செய்ய ஒரு கருப்பு சட்டத்தை உள்துறை அமைச்சர் கொண்டு வந்து இருக்கிறார்.

    இதற்கு முன்பு குடியுரிமை திருத்த சட்டம், வக்பு திருத்த சட்டம் என்று சிறுபான்மை மக்களுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தனர்.

    அப்போதெல்லாம் தி.மு.க. சார்பில் அந்த சட்டங்களை எப்படி கடுமையாக எதிர்த்தோமோ அதே மாதிரி இந்த கருப்பு சட்டத்தையும் எதிர்ப்போம்.

    இதையெல்லாம் இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றால் மக்கள் பிரச்சனைகளில் இருந்து திசை திருப்புகிறார்கள். மக்களுடைய கவனத்தை மட்டும் திசை திருப்ப அல்ல. நாட்டையே ஜனநாயக பாதையில் இருந்து திசை திருப்ப இப்படி செய்கிறார்கள்.

    உறுதியாக சொல்கிறேன் தி.மு.க இருப்பது உங்களுக்காக தான். இந்த சமுதாயத்திற்காக தான். குறிப்பாக சிறுபான்மை சமுதாய மக்களுக்கு எப்போதும் தி.மு.க. துணை நிற்கும்.

    விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளர் சுபேர் கான் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×