என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு அதிகரிப்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதட்டம் - செல்லூர் ராஜூ
- தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் நட்பு ரீதியான கூட்டணி என்பார்கள்.
- தமிழ்நாட்டில் நடைபெறும் தி.மு.க. ஆட்சி மீது அனைத்து மக்களும் அதிகமான வெறுப்பில் இருக்கிறார்கள்.
மதுரை:
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
மதுரையில் முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்த பின்னரும் 30 சதவீத பகுதிகளுக்கு இன்னும் குடிநீர் போய் சேரவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் மூன்று மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் மதுரை மக்கள் அனைவரும் பயனடைவார்கள்.
தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் நட்பு ரீதியான கூட்டணி என்பார்கள். அ.தி.மு.க. கூட்டணி வைத்தால் அடிமை என்கிறார்கள்.
இது தி.மு.க.வுக்கு தான் பொருந்தும். பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தபோது தமிழ்நாட்டில் இந்தியை கொண்டு வந்தவர்கள் தி.மு.க.வினர். தற்போது அதி.மு.க., பா.ஜ.க. கூட்டணி செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் பல்வேறு குழப்பம் ஏற்பட்டுள்ளன. அ.தி.மு.க. கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணியாக இருக்கிறது.
அ.தி.மு.க.வில் இருந்து தொண்டர்களின் ரத்தத்தை உறிஞ்சி பதவி சுகத்தை அனுபவித்த செங்கோட்டையன் செல்லாகாசாகி விட்டார். அவரைப் பற்றி பேசுவது தேவையில்லை. எடப்பாடி பழனிசாமி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர். அவர் மு.க. ஸ்டாலினை விட பன்மடங்கு சிறந்த நிர்வாகியாக திகழ்கிறார். அவருக்கு அதிகரித்து வரும் செல்வாக்கை பார்த்து மு.க.ஸ்டாலினுக்கு பதட்டம் அதிகரித்துள்ளது.
மத்திய பட்ஜெட்டை தமிழகத்தைச் சேர்ந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 9-வது முறையாக தாக்கல் செய்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மத்திய பட்ஜெட் சிலருக்கு கசப்பாகவும், பலருக்கு இனிப்பாகவும் இருக்கிறது.
ஆனால் மத்திய பட்ஜெட் பொருத்தவரை நெல்லிக்கனி போல சிறப்பாக அமைந்துள்ளது. மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை மத்திய அரசு தர மறுக்கவில்லை. ஆனால் தி.மு.க. அரசு தயார் செய்துள்ள திட்ட விவரங்களில் குளறுபடிகள் உள்ளன.
எனவே தான் அதை மத்திய அரசு திருப்பி அனுப்பி உள்ளது. ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக மத்திய அரசு மெட்ரோ ரெயிலை ரத்து செய்து விட்டதாக தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் நடைபெறும் தி.மு.க. ஆட்சி மீது அனைத்து மக்களும் அதிகமான வெறுப்பில் இருக்கிறார்கள். இப்படி ஒரு ஆட்சி நமக்கு தேவை இல்லை என்று உறுதியாக இருக்கிறார்கள். எனவே வருகிற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி மாற்றத்தை மக்கள் நிச்சயம் கொண்டு வருவார்கள்.
இவர் அவர் கூறினார்.






