என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.
- திருவேற்காடு, பூவிருந்தவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், அரும்பாக்கம், கிண்டி, சைதப்பேட்டை, கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர், வளசரவாக்கம், ஈக்காட்டுத்தாங்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், வாகனகரம், மதுரவாயல், திருவேற்காடு, பூவிருந்தவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
மேலும், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, கன்னிவாக்கம், பொத்தேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது
இந்நிலையில் 13 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.






