என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நிதி வழங்கிய மத்திய அரசு: RTE சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு
    X

    நிதி வழங்கிய மத்திய அரசு: RTE சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு

    • மத்திய அரசு நிதி வழங்கியதால் தனியார் பள்ளியில் 25 சதவீத சேர்க்கைக்கு அனுமதி.
    • இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க முடியாது. பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

    இலவச கல்வி உரிமை சட்டத்தின் (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் எல்.கே.ஜி. முதல் 1-ம் வகுப்பு வரை இலவசமாக படிக்க வழி வகை செய்யும் மத்திய அரசின் திட்டத்தில் தமிழகத்தில் 1 லட்சம் குழந்தைகள் ஆண்டு தோறும் சேர்க்கப்படுகிறார்கள்.

    தற்போது மத்திய அரசு நிதி வழங்காததால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. இதனால் தனியார் பள்ளிகளில் இந்த வருடம் இலவச கல்வி திட்டத்தில் குழந்தைகளை சேர்க்க முடியவில்லை.

    இந்த நிலையில் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்கியதால் மாணவர் சேர்க்கையை அரசு தொடங்கியுள்ளது. காலதாமதமாக தொடங்குவதால் மாணவர்கள் ஏற்கனவே பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்கள். இதனால் புதிதாக குழந்தைகளை சேர்க்க வாய்ப்பு இல்லை.

    தற்போது தனியார் பள்ளிகளில் படித்து வரும் குழந்தைகளை இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.

    ஏற்கனவே பெறப்பட்ட கல்வி கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்று மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை தொடங்கியது. அனைத்து மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் அவர்களுக்கு குழந்தைகளை இலவச கல்வி திட்டத்தில் சேர்ப்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பள்ளியிலும் படிக்கக்கூடிய எல்.கே.ஜி., யு.கே.ஜி., 1-ம் வகுப்பு குழந்தைகளை இந்த திட்டத்தில் சேர்க்க வேண்டும். கல்வி கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    இதற்கு தனியார் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பணத்தை திருப்பி கொடுப்பது சிரமம். காலாண்டு தேர்வு முடிந்துவிட்ட நிலையில் கட்டணத்தை திருப்பி கொடுத்தால் தனியார் பள்ளிகளுக்கு நஷ்டம் பெருமளவில் ஏற்படும்.

    காலதாமதத்திற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் எப்படி பொறுப் பேற்க முடியும் என தனியார் பிரைமரி, நர்சரி, மெட்ரிக்கு லேசன் பள்ளிகள் சங்க மாநில தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே தற்போது இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க முடியாது. பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    Next Story
    ×