என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தை மாதிரி நூலகமாக அறிவிக்கக்கோரி வழக்கு- மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
    X

    தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தை மாதிரி நூலகமாக அறிவிக்கக்கோரி வழக்கு- மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

    • நூலகத்தை பராமரிப்பதற்கு என 46 பணியிடங்கள் உள்ள நிலையில், 14 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.
    • தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் மிகவும் பழமையானது.

    மதுரை:

    சென்னையைச் சேர்ந்த பிரபாகரன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, உருது, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 60 ஆயிரம் கையெழுத்து பிரதிகளும், 4503 அரிய புத்தகங்களும் இந்த நூலகத்தில் உள்ளன. இந்த நூலகத்தை பராமரிப்பதற்கு என 46 பணியிடங்கள் உள்ள நிலையில், 14 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இது போன்ற நூலகங்களை வரலாற்று சிறப்புடன் பாதுகாப்பது அரசின் கடமை.

    நூலகத்தின் இயக்குனர், நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களும் காலியாக இருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. 2014-ம் ஆண்டு மத்திய அரசு மத்திய நூலகங்களுக்கான பணிகள் எனும் பெயரில் இதுபோல பழமையான நூலகங்களை பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்தது. தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தையும் தேசிய நூலகங்களுக்கான பணிகள் திட்டத்தின் கீழ் மாதிரி நூலகமாக வகைப்படுத்தி உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

    ஆகவே தேசிய நூலகங்களுக்கான பணிகளின் திட்டத்தின் கீழ் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தை 'மாதிரி நூலகமாக" அறிவித்து அதன் புனரமைப்பு மற்றும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நிதியை ஒதுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு, தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் மிகவும் பழமையானது. ஆகவே அதற்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்து, வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

    Next Story
    ×