என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவை புதிய மேம்பாலத்தில் சென்ற கார் விபத்தில் சிக்கியது- 3 பேர் உயிரிழப்பு
- பாலத்தில் இருந்து சிறிது தூரத்தில் லாரி ஒன்று சாலையோரம் நின்றிருந்தது.
- நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கார் மீட்கப்பட்டது.
கோவை:
கோவை-அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலம் கடந்த 9-ந்தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பாலத்தில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த உயர்மட்ட மேம்பாலத்தில் கோவை உப்பிலிபாளையம் பகுதியில் இருந்து கோல்டுவின்ஸ் நோக்கி கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த காரில் 2 வாலிபர்கள், ஒரு பெண் இருந்தனர்.
கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள இறங்கு தளத்தில் கார் இறங்கி கொண்டிருந்தது. அப்போது பாலத்தில் இருந்து சிறிது தூரத்தில் லாரி ஒன்று சாலையோரம் நின்றிருந்தது.
பாலத்தில் இருந்து இறங்கிய கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்ற லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் லாரியின் அடியில் சிக்கி கொண்டது. இதில் கார் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது.
காரில் இருந்த 3 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும், பீளமேடு, கோவை தெற்கு தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் லாரிக்குள் சிக்கிய காரையும், காரில் இருந்தவர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கார் மீட்கப்பட்டது. ஆனால் காரில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர்.
இதையடுத்து போலீசார் இறந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தில் இறந்தவர்கள் யார் என விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறந்த வாலிபர்கள் கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த ஹாரீஸ்(20) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஷேக் உசேன்(20) என்பதும், அவர்களுடன் வந்த பெண் அவர்களது தோழி என்பதும் தெரியவந்தது. மேலும் ஹாரீஸ், சேக் உசேன் ஆகியோர் துணிக்கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இவர்கள் இரவு நேரத்தில் எங்கு சென்றனர் என்பது தெரியவில்லை. புதிய பாலம் திறக்கப்பட்ட பிறகு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாலத்தை பார்ப்பதற்காக பலர் வாகனங்களில் வருகின்றனர். எனவே இவர்கள் பாலத்தை சுற்றி பார்க்க வந்து விட்டு, மீண்டும் திரும்பியபோது விபத்தில் சிக்கி இருக்கலாம் என தெரிகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






