என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே டேங்கர் லாரி மீது கார் மோதி 3 பேர் பலி
- சேலம் சென்று கொண்டிருந்த கார் டேங்கர் லாரி மீது மோதியது.
- விபத்து காரணமாக சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உளுந்தூர்பேட்டை:
சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகன் சந்தோஷ் (வயது28). இவரது உறவினர் பாக்கியலட்சுமி(55). இவர் கடலூர் பாதிரிக்குப்பத்தில் வசித்து வந்தார். இவரை அழைத்து செல்வதற்காக சந்தோஷ் காரில் கடலூர் வந்தார். பின்னர் பாக்கியலட்சுமியை அழைத்து கொண்டு சேலம் புறப்பட்டார்.
காரில் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சூர்யா (24) என்பவரும் பயணம் செய்தார். காரை சந்தோஷ் ஓட்டி சென்றார். இந்த கார் இன்று காலை 8 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட செம்பியன்மாதேவி கன்னிமார் கோவில் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக 35 டன் தார் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சென்றது. இந்த லாரி டிரைவர் இன்டிகேட்டர் போடாமல் திடீரென வலது புறமாக செல்ல முயன்றபோது டிரைவர் திடீரென பிரேக் போட்டார். அப்போது சேலம் சென்று கொண்டிருந்த கார் டேங்கர் லாரி மீது மோதியது. இதில் காரை ஓட்டி சென்ற சந்தோஷ், பாக்கியலட்சுமி, சூர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டி சென்றவர் தஞ்சை மாவட்டம், மாரனேரி கோவில் தெருவை சேர்ந்த துரைராஜ் என்பது தெரியவந்தது. அவர் விபத்து நடந்ததும் லாரியை அங்கே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளளது.






