என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. ஆட்சி மக்களால் அகற்றப்படுவது உறுதி- மத்திய மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் பேச்சு
- தி.மு.க. அரசு அடிப்படையில் வாரிசு அரசியலை மட்டுமே ஊக்குவிக்கிறது.
- வாரிசு அரசியலை ஊக்குவிப்பது மட்டுமே அவர்களின் ஒரே நோக்கம் மற்றும் குறிக்கோளாக உள்ளது.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று பா.ஜ.க சார்பில் சிறப்பு கைவினை கலைஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் கலந்து கொண்டு கைவினை கலைஞர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
10-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூருக்கு வந்து உங்களை சந்தித்ததில் பெருமை அடைகிறேன். நாங்கள் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம். அதனால் கைவினை கலைஞர்கள் வசிக்கும் பல இடங்களுக்கும், அவர்களின் கூட்டமைப்புகள் உள்ள இடங்களுக்கும் நாங்கள் நேரில் சென்று வருகிறோம். அவர்கள் ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொண்டால், அதை எங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்த்து கொள்வோம். தேர்தலுக்கு பிறகு நாங்கள் (அதாவது என்.டி.ஏ. கூட்டணி) ஆட்சிக்கு வரும்போது, அந்த கைவினைஞர்களின் பிரச்சனைகளை எங்களால் தீர்க்க முடியும். இத்தகைய இடங்களுக்கும், கைவினைஞர் கூட்டமைப்புகளுக்கும் செல்வது தான் எங்களின் நோக்கம் மற்றும் குறிக்கோள். இது முதலாவது விஷயம்.
தி.மு.க. அரசு அடிப்படையில் வாரிசு அரசியலை மட்டுமே ஊக்குவிக்கிறது. தமிழக மக்களை பற்றி கவலைப்படுவதில்லை. வாரிசு அரசியலை ஊக்குவிப்பது மட்டுமே அவர்களின் ஒரே நோக்கம் மற்றும் குறிக்கோளாக உள்ளது.
என்.டி.ஏ கூட்டணியினர், தமிழகத்தின் வளர்ச்சியை ஊக்குவிப்போம். தமிழக மக்களுக்கு ஒரு நல்லாட்சியை வழங்குவோம். தி.மு.க.வினர் வாரிசு அரசியலை மட்டுமே ஊக்குவிப்பதால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. நீங்கள் தரவுகளை பார்த்தால், பாலியல் துன்புறுத்தல் வழக்குகள், கொலைகள், போதைப்பொருள் புழக்கம் போன்ற அனைத்து தீமைகளும் தி.மு.க ஆட்சியில் நுழைந்துவிட்டன.
இதனால் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, இந்த தேர்தலில் நிச்சயமாக அவர்கள் மக்களால் அகற்றப்படுவார்கள். தேர்தலில் வெற்றி பெற்று என்.டி.ஏ. அரசு அமையும். நாங்கள் கைவினைஞர்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்போம் என்றார்.






