என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகம் முழுவதும் பஸ் பயணிகளிடம் செல்போன்களை திருடிய ஆந்திரா கும்பல் கைது
- ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட 2 சொகுசு கார்களை சுற்றி வளைத்து அதிலிருந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்து பயணிகளிடம் திருடப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த 79 செல்போன்களும், 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் பகுதிகளில் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன்களை திருடுவது அதிகரித்து வந்தது.
இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் கிரிஷ் யாதவ் உத்தரவின் பேரில் அவிநாசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் மேற்பார்வையில் அவிநாசி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் முத்துமாரியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் தனிப்படை காவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு செல்போன் திருடர்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
நேற்று மாலை அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் கோவை சவுரிபாளையத்தைச் சேர்ந்த டிவைன், திருவண்ணாமலை மாவட்டம் எருமூண்டியை சேர்ந்த தனசேகர் ஆகியோரிடம் செல்போன்களை திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அவிநாசியை அடுத்து பழங்கரை அருகே கோவை - சேலம் 6 வழிச்சாலையோரம் உள்ள டிரக் பார்க்கிங்கை போலீசார் கண்காணித்தபோது, சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட 2 சொகுசு கார்களை சுற்றி வளைத்து அதிலிருந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் மேற்கு கோதவரியை சேர்ந்த நக்கா ஹரிஷ் (வயது 44), குருமில்லி பகுதியை சேர்ந்த ராஜூ (31), பாஷா (25), கும்மிரிகுண்டா பிரகாஷ் (32) மற்றும் ஒடிசா மாநிலம் சோரடாவை சேர்ந்த சிறுவன் என தெரியவந்தது. கார்களை சோதனை செய்த போது, அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் 2பேரிடம் திருடப்பட்ட தலா ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களும் மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்து பயணிகளிடம் திருடப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த 79 செல்போன்களும், 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் சென்று செல்போன் திருட்டில் ஈடுப்பட்டுள்ளனர். இதையடுத்து 5பேரையும் கைது செய்தனர். கைதானவர்களில் சிறுவனை கோவை சிறார் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 4பேரும் அவிநாசி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் செல்போன்களை திருடிய ஆந்திர மாநில கும்பலை அதிரடியாக கைது செய்த தனிப்படையினரை எஸ்.பி., அசோக் கிரிஷ் யாதவ் பாராட்டினார்.






