என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் கூட்டத்தில் அதிகார துஷ்பிரயோகம் - மாம்பழ சின்ன பயன்பாட்டிற்கு ராமதாஸ் கண்டனம் - அன்புமணி பதில்
- அரசியல் அறமற்ற இந்தச் செயலைத் தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்
- திகார பலத்தைப் பயன்படுத்திச் சின்னத்தை அபகரிக்க நினைக்கும் இச்செயலைத் தேர்தல் ஆணையம் உடனடியாகக் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவுள்ளது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளார்.
இந்த பொதுக்கூட்ட மேடையில் கூட்டணி கட்சிகளின் சின்னங்கள் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் பாமகவின் மாம்பழ சின்னம் இடம்பெற்றுள்ளது. அதற்கு தான் உருவாக்கிய மாம்பழ சின்னத்தை பிரதமர் பங்கேற்கும் மேடையில் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
"இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் பிரச்சாரத் தொடக்க விழாவில், நான் நிறுவிய பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாற்றுச் சின்னமான 'மாம்பழம்' சின்னம் மேடையின் பின்னணியில் பயன்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, தற்போது பாட்டாளி மக்கள் கட்சிக்குள் நிலவும் தலைமைப் போட்டியால் 'மாம்பழம்' சின்னம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ள ஒரு பிரிவினர் (அன்புமணி தரப்பு), தேர்தல் ஆணையத்தால் இன்னும் அங்கீகரிக்கப்படாத ஒரு சின்னத்தை, நாட்டின் பிரதமரே பங்கேற்கும் ஒரு பொதுக்கூட்ட மேடையில் காட்சிப்படுத்துவது சட்டவிரோதமானது மற்றும் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.
இதன் மூலம் நான் தெரிவித்துக் கொள்வது:
தேர்தல் ஆணையத்தின் வசம் நிலுவையில் உள்ள ஒரு சின்னத்தை மேடையில் பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. பிரதமர் பங்கேற்கும் ஒரு நிகழ்வில், இத்தகைய சட்டவிரோதச் செயல்களைச் செய்வது பிரதமரின் பதவிக்கும், ஜனநாயக மரபுகளுக்கும் இழைக்கப்படும் அவமரியாதையாகும். 'மாம்பழம்' சின்னம் பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்களின் அடையாளம். அது இன்னும் யாருக்கும் ஒதுக்கப்படாத நிலையில், அதனை ஒரு குறிப்பிட்ட அணி தனக்கானதாகக் காட்டிக்கொள்வது தமிழக மக்களை ஏமாற்றும் செயலாகும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பூர்வமான தலைமை மற்றும் சின்னம் குறித்த வழக்கு நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் உள்ளது. இத்தகைய சூழலில், அதிகார பலத்தைப் பயன்படுத்திச் சின்னத்தை அபகரிக்க நினைக்கும் இச்செயலைத் தேர்தல் ஆணையம் உடனடியாகக் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் அறமற்ற இந்தச் செயலைத் தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அன்புமணி, மாம்பழம் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம்தான் கேட்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.






