என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை - காவல்துறை
- போலீசார் முன்பு ஆஜரான பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, கேள்விக்கு முறையாக பதிலளிக்கவில்லை.
- ஜெகன்மூர்த்திக்கும் சஸ்பெண்ட் ஏடிஜிபி ஜெயராமுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை தேவை.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் சகோதரரை கடத்தியது தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தேடினர்.
இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பூவை ஜெகன்மூர்த்திக்கு உத்தரவிட்டார்.
அதேவேளையில் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமை கைது செய்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, ஜெயராமிடம் விசாரணை நடத்திய போலீசார் விசாரணைக்கு பின்பு அவரை விடுவித்தனர். தனக்கு எதிராக பிறப்பிக்கப்படட உத்தரவை எதிர்த்து கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டார். அதன்படி பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு மீதான விசாரணையை நீதிபதி வேல்முருகனிடம் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
நேற்று அந்த முன்ஜாமின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் விசாரணையை தள்ளிவைக்க கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து, விசாரணையை இன்று தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் முன்ஜாமின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
போலீசார் முன்பு ஆஜரான பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, கேள்விக்கு முறையாக பதிலளிக்கவில்லை. முன்ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைப்பார், பூவை ஜெகன்மூர்த்தியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லை, அரசியல் காரணங்களால் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும்போது ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பதாக பூவை ஜெகன்மூர்த்தி கோர்ட்டில் உறுதி அளித்தார்.
நீங்கள் அரசியலில் இருப்பதால் ஒருவேளை யாரும் புகார் தராமல் இருந்திருக்கலாம் என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த கடத்தல் சம்பவத்துக்கும் மூளையாக செயல்பட்டது ஜெகன்மூர்த்தி தான். வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் முன்ஜாமின் வழங்கக்கூடாது. ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுடன் சேர்த்து ஜெகன்மூர்த்தியை விசாரிக்க வேண்டி உள்ளது. ஜெகன்மூர்த்திக்கும் சஸ்பெண்ட் ஏடிஜிபி ஜெயராமுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை தேவை. எனவே பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.






