என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாக்டீரியா தொற்று தாக்கி 8 பேர் உயிரிழந்த விவகாரம் - பல் மருத்துவமனையில் சுகாதாரத்துறை ஆய்வு
- பல் ஆஸ்பத்திரியில், சலைன் பாட்டிலை திறக்க சுத்தம் செய்யப்படாத அறுவை சிகிச்சை சாதனத்தை பயன்படுத்தி உள்ளனர்.
- நோயாளிகளின் வாய்வழியாக நரம்புப்பாதையில் நுழைந்து பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 2023-ம் ஆண்டு ஒரு பல் ஆஸ்பத்திரியில் பல் சிகிச்சைக்கு வந்த 10 பேருக்கு பாக்டீரியா தொற்று தாக்கி உள்ளது. இது, மூளையில் தாக்கும் நரம்பியல் சார்ந்த பாக்டீரியா தொற்று ஆகும்.
தொற்று தாக்கிய 16 நாட்களுக்குள் 10 பேரில் 8 பேர் இறந்து விட்டனர்.
இதுகுறித்து எந்த அரசு நிறுவனமும் தகவல் தெரிவிக்கவில்லை. இருப்பினும், வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி மருத்துவமனை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தமிழ்நாடு பொது சுகாதார இயக்குனரகம் ஆகியவற்றை சேர்ந்த டாக்டர்கள் குழு விசாரணையை தொடங்கியது.
அந்த விசாரணையில், வாணியம்பாடியில் உள்ள பல் ஆஸ்பத்திரிக்கும், தொற்று பரவலுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. அதற்குள் அந்த ஆஸ்பத்திரி மூடப்பட்டது.
டாக்டர்கள், மாதிரிகளை சேகரித்து சோதனை நடத்தினர். அதில், திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. பல் ஆஸ்பத்திரியில், சலைன் பாட்டிலை திறக்க சுத்தம் செய்யப்படாத அறுவை சிகிச்சை சாதனத்தை பயன்படுத்தி உள்ளனர்.
பின்னர், அந்த பாட்டிலை மீதி திரவத்துடன் அப்படியே மூடி வைத்துள்ளனர். நோயாளிகளின் வாயை சுத்தப்படுத்த அந்த திரவத்தை மீண்டும் பயன்படுத்தி உள்ளனர்.
இதன்மூலம், நோயாளிகளின் வாய்வழியாக நரம்புப்பாதையில் நுழைந்து பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது. இது, நரம்பு மண்டலத்தை மொத்தமாக பாதிக்கும் தொற்று ஆகும். காய்ச்சல், தலைவலி, வலிப்பு, மண்டை நரம்புவாதம், மூளை சீழ்கட்டி ஆகியவை இதன் அறிகுறிகள்.
8 நோயாளிகளும், தொற்று தாக்கியதில் இருந்து 16 நாட்களிலும், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து 9 நாட்களிலும் இறந்து விட்டனர்.
அதே காலகட்டத்தில், திருப்பத்தூர் உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில், மேலும் 11 பேருக்கும் இதே பாக்டீரியா தொற்று தாக்கி இருந்தது. ஆனால் அவர்கள் அந்த பல் ஆஸ்பத்திரிக்கு செல்லாதவர்கள்.
இருப்பினும், எப்படியோ தொற்று வந்த நிலையில், அவர்களில் ஒருவர் மட்டும் உயிரிழந்தார். ஆனால், தொற்று தாக்கிய 56 நாட்களுக்கு பிறகுதான் அவருக்கு உயிரிழப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் பாக்டீரியா தொற்றால் 8 பேர் பலியானதாக மருத்துவர்கள் குழு அறிக்கை அளித்ததையடுத்து வி.டி.எஸ். தனியார் பல் மருத்துவமனையில் சுகாதாரத்துறை ஆய்வு நடத்தியது.
திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஞானமீனாட்சி மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.






