கொளத்தூரில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்களா?- அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்

அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். வதந்தியை பரப்பாதீர்கள்.
கொளத்தூரில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்களா?- அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்
Published on

சென்னை:

கொளத்தூர் தொகுதியில் 84-ம் வாக்குச்சாவடியில் வீட்டு எண் 11-ல் 30 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ரபியுல்லா என்ற ஒரே பெயரில் 3 வாக்காளர்கள் இருக்கின்றனர் என பா.ஜ.க. எம்.பி. பேசியதை தமிழக பா.ஜ.க. சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தது.

இதற்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் படத்துடன் விளக்கம் அளித்து இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொளத்தூர் தொகுதி ஆண்டாள் அவென்யூவில் உள்ள 11-ம் எண் என்பது தனி வீடல்ல, அது அடுக்குமாடி குடியிருப்பு பகுதி. வாக்குச்சாவடி எண் 84 விவரங்களின்படி, வரிசை எண் 40 முதல் 75 வரையில் உள்ள வாக்காளர்கள் 11 எண் கொண்ட ஏ.எஸ்.வீனஸ் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இதில் ரபியுல்லா என்பவரின் பெயர் வரிசை எண் 50-லும், 52-ல் கணவர் என்கிற இடத்திலும் இடம்பெற்றுள்ளது. மேலும் வரிசை எண் 348, 352 ஆகியவற்றில் தந்தை என்ற இடத்தில் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் காணொளியில் குறிப்பிட்டது போல ரபியுல்லா என்ற பெயரில் 3 வாக்காளர்கள் இல்லை. வாக்குச்சாவடி எண் 157-ல் (வேறு பகுதி) ரபியுல்லா பெயர் தந்தை, கணவர் என்ற இடங்களில் வருகிறது. 11 எண் கொண்ட குடியிருப்பில் முஸ்லிம்கள் மட்டும் வசிப்பது போன்ற தவறான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். அங்கு அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். வதந்தியை பரப்பாதீர்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com