என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தீபாவளியை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் பயணம்
- சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து மாநகர சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் இதுவரை 2.75 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் இப்போதே தயாராகி வருகிறார்கள். தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த ஒரு வாரமாகவே ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்துக்கான ஆடைகளை வாங்கிவிட்டனர். அவர்கள் தற்போது தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கும் புறப்பட்டு செல்ல தொடங்கி உள்ளனர்.
தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் சென்று கொண்டாட விரும்பும் மக்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் 4 நாட்கள் சிறப்பு பஸ்களும் விடப்பட்டுள்ளன. மேலும் மற்ற முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த 4 நாட்களும் மொத்தம் 20,378 பஸ்கள் விடப்படுகிறது.
இந்த சிறப்பு பஸ்கள் நேற்று முதல் புறப்பட்டு சென்றன. சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன், சிறப்பு பஸ்களும் புறபட்டு செல்கின்றன. இந்த பஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து மாநகர சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.
முதல் நாளான நேற்று சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பஸ்கள், 761 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 2,853 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் 1,28,275 பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் இதுவரை 2.75 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து இன்று வழக்கமாக இயக்கப்படும் 2,092 பஸ்களுடன் 2,165 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 4,257 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1,790 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இன்று சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக இன்று மட்டும் 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை வருகிற திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் நாளை (சனிக்கிழமை) முதல் விடுமுறை தொடங்குகிறது. இதனால் கடைசி நேர நெரிசலை தவிர்ப்பதற்காக இன்று முதல் பொதுமக்கள் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். அதன் அடிப்படையில் இன்று சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.
மேலும் பொதுமக்கள் நேரடியாக சென்று, அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு செய்யும் வகையில், சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பஸ் நிலையங்களில் 12 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுஉள்ளன. இந்த முன்பதிவு மையங்கள் நேற்று முதல் செயல்பட்டு வருகின்றன. இங்கும் பொதுமக்கள் நேரடியாக சென்று டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
வார இறுதி நாட்களான நாளையும், நாளை மறுநாளும் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்வார்கள் என்றும், கடைசி நேரத்தில் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் கூடுதல் பஸ்களை இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் தனியார் ஆம்னி பஸ்கள் மூலமும் பயணிகள் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு நேற்று முதல் புறப்பட்டு சென்றனர். தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனாலும் இன்று முதல் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆம்னி பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் ஏற்கனவே ஆம்னி பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் ரெயில் பயணத்தையே முதலில் திட்டமிடுவது வழக்கம். தற்போது ரெயில்களில் பயணம் செய்வதற்கு 2 மாதங்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. தீபாவளிக்காக ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நாளிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன.
இதையடுத்து தீபாவளிக்கு சிறப்பு ரெயில்களும் அறிவிக்கப்பட்டன. அந்த ரெயில்களிலும் டிக்கெட் முழுவதும் நிரம்பிவிட்டது. சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து புறப்படும் 60 ரெயில்களில் பயணிக்க சுமார் 2.20 லட்சம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து உள்ளனர். இந்த ரெயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் மேலும் 35 ஆயிரம் பயணிகள் பயணம் செய்ய முடியும்.
மேலும், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இன்றும் நாளையும் முன்பதிவு இல்லாத ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் பயணம் செய்யவும் பயணிகள் இப்போதே தயாராகி வருகிறார்கள்.
இதுதவிர சென்னையில் வசிப்பவர்களில் பலர் கார்கள் உள்ளிட்ட தங்களது சொந்த வாகனங்களிலும் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களது சொந்த வாகனங்கள் மூலம் தீபாவளி பண்டிகையை கொண்டாட தென்மாவட்டங்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இன்றும் நாளையும் சென்னை ஜி.எஸ்.டி. சாலையில் செல்ல கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அவை மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகின்றன.
மேலும், கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் வெளியூர் செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து பழைய மாமல்லபுரம் சாலை, கேளம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு வழியாக செல்ல வேண்டும். அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை, கேளம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி நேற்று முதலே போலீசார் அறிவுறுத்திய பாதைகளில் சொந்த வாகனங்களில் சென்றவர்கள் பயணம் செய்தனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து அரசு விரைவு பஸ்கள், தனியார் ஆம்னி பஸ்கள், ரெயில்கள் மற்றும் சொந்த வாகனங்கள் மூலம் சுமார் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.






