என் மலர்
தமிழ்நாடு

நெல்லையில் பேக்கரியை வாளால் வெட்டி சூறையாடிய வாலிபர் கைது
- மாதவனை தீவிரமாக தேடி வந்த நிலையில் அவரது செல்போன் சிக்னல் மூலமாக போலீசார் பின் தொடர்ந்தனர்.
- மாதவன் கோயம்புத்தூரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
நெல்லை:
நெல்லை டவுன் சாலியர் தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 60). இவர் அதே தெருவில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேக்கரி நடத்தி வருகிறார்.
கடந்த 6-ந்தேதி நள்ளிரவு கடையை அடைக்கும் நேரத்தில் சாலியர் தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் சுமார் 3 அடி நீளம் கொண்ட வாளுடன் தங்கராஜ் கடைக்கு வந்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் கடையின் முகப்பில் இனிப்பு, காரங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பாட்டில்களை சரமாரியாக வாளால் வெட்டினார். இதில் கண்ணாடி பாட்டில்கள் நொறுங்கின. மேலும் கடையை அடித்து நொறுக்கி சூறையாடிவிட்டு அங்கு பணியில் இருந்த ஊழியர்களையும் வாளால் மிரட்டி விட்டு சென்றுள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. மூலம் விசாரணை நடத்தினர். அதில் வாளால் கடையை சேதப்படுத்திய வாலிபர் டவுன் அடைக்கலமாதா தெருவை சேர்ந்த மாதவன்(வயது 21) என்பது தெரியவந்தது.
தலைமறைவான மாதவனை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தர வின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாதவனை தீவிரமாக தேடி வந்த நிலையில் அவரது செல்போன் சிக்னல் மூலமாக பின் தொடர்ந்தனர்.
அதில் மாதவன், கோயம்புத்தூரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை இன்று அதிகாலை மாதவனை கைது செய்தனர். பின்னர் அவரை நெல்லைக்கு கொண்டு வந்தனர்.