search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெண்கள் தற்கொலை முயற்சி சம்பவம்: கலப்பு திருமணம் செய்த காதல் தம்பதி கோவில் விழாவில் பங்கேற்க அனுமதி
    X

    வேப்பமரத்தூர் கிராமத்தில் இன்று மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பெண்கள் தற்கொலை முயற்சி சம்பவம்: கலப்பு திருமணம் செய்த காதல் தம்பதி கோவில் விழாவில் பங்கேற்க அனுமதி

    • சுரேஷ் தரப்பினர் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள எவ்வித ஆட்சேபனை இல்லை என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
    • கிராமத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

    தொப்பூர்:

    தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள வேப்பமரத்தூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது.

    கோவில் கும்பாபிஷேகத்திற்காக அந்த கிராமத்தில் உள்ள 250 குடும்பங்களிலும் வீட்டுக்கு ரூ.5 ஆயிரம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது37) என்பவர் மொரப்பூர் அருகே உள்ள பறையப்பட்டியில் வேறு சமூகத்தை சேர்ந்த சுதா (30) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

    இதனால் விழாக்குழுவினர் சுரேஷ் குடும்பத்தினரிடம் கோவில் விழாவுக்கு வரி வாங்கவில்லை. இதனால் கோவில் திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுதா பொம்மிடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அந்த புகாரின் பேரில் இருரப்பினர்களையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்க முடியாது விழா ஏற்பாடுகளை நிறுத்தி வையுங்கள் என்று கிராம மக்களிடம் தெரிவித்தனர்.

    இதனால் நேற்று முன்தினம் இரவு காதல் தம்பதி சுரேஷ், சுதா ஆகியோர் குடும்பத்தினர் கோவில் திருவிழாவில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து அதே கிராமத்தை சேர்ந்த முருகன் மனைவி ராமு (வயது 35), மற்றொரு முருகன் மனைவி கவிதா (38), அனுமந்தன் மனைவி அலமேலு (36), மாதேஷ் மனைவி தேன்மொழி (35), ரமேஷ் மனைவி அமுதா (35), அசோகன் மனைவி விஜயா (23) ஆகிய 6 பேரும் கோவில் அருகே பாயாசம் செய்து அதில் விஷம் கலந்து குடித்து விட்டு தற்கொலைக்கு முயன்றனர்.

    இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து நேற்று வேப்பமரத்தூர் கிராமத்தில் தாசில்தார் ஜெயசெல்வம், அரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) நாகலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, கோவிந்தசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் ஊர்கவுண்டர் துரை மற்றும் சுரேஷ், அவரது மனைவி சுதா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் சுரேஷ் தரப்பினர் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள எவ்வித ஆட்சேபனை இல்லை என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இருதரப்பிலும் சமரசம் ஏற்பட்டது.

    இதையடுத்து இன்று கோவில் கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர். பிரச்சினை எதுவும் ஏற்படாமல் இருக்க அந்த கிராமத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×