search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாயமான 7-ம் வகுப்பு மாணவியின் கதி என்ன? மீட்க கோரி புகைப்படத்துடன் பரவிய தகவல்
    X

    மாயமான 7-ம் வகுப்பு மாணவியின் கதி என்ன? மீட்க கோரி புகைப்படத்துடன் பரவிய தகவல்

    • சம்பவம் குறித்து மாணவியின் தாய் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • மாணவி மாயமானது அவரது பெற்றோரையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் அடுத்த ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் சுதாகரன்.

    இவரது மனைவி சசிகலா. இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 12 வயதில் ஸ்ரீநிதி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    ஸ்ரீநிதி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது முழு ஆண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் ஸ்ரீநிதி வீட்டில் இருந்து வந்தார்.

    நேற்று காலை சுதாகரன் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சசிகலா, அவரது மகள் ஸ்ரீநிதி மற்றும் மகன் மட்டும் இருந்தனர். மதியம் சசிகலா வீட்டில் வேலைகளை பார்த்து கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீநிதி தனது சகோதருடன் வீட்டின் முன்பு நின்று விளையாடி கொண்டிருந்தார். சசிகலா வேலையை முடித்து விட்டு மதியம் 1.30 மணிக்கு வெளியில் வந்து பார்த்த போது மகன் மட்டும் நின்றிருந்தார். மகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியான அவர் இதுகுறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக அவர் வீட்டிற்கு விரைந்து வந்தார். பின்னர் 2 பேரும் சேர்ந்து அக்கம்பக்கம் உள்ளவர்களின் வீடு மற்றும் அருகே உள்ள இடங்கள் முழுவதும் ஸ்ரீநிதியை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என நினைத்து அவர்களை தொடர்பு கொண்டு விசாரித்தனர். ஆனால் மாணவி அங்கும் செல்லவில்லை என்பது தெரியவந்தது.

    இதனால் மாணவியின் தாய் சசிகலா சம்பவம் குறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மாணவியின் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் விசாரித்து விட்டு, அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில் மாணவி வீட்டில் இருந்து நடந்து ஒண்டிப்புதூர் பஸ் நிறுத்தத்திற்கு செல்வதும், அங்கிருந்து உக்கடம் செல்லும் பஸ்சில் ஏறும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து போலீசார் உக்கடம் பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பஸ் நிலையம் மற்றும் அங்கு வந்த அனைத்து பஸ்களிலும் ஏறி தேடி பார்த்தனர். ஆனால் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கு சென்றார் என்பதும் தெரியவில்லை.

    மாணவி மாயமாகி ஒரு நாள் ஆகியும் இன்னும் கிடைக்காததால் மாணவியின் பெற்றோர் அழுதபடியே மிகுந்த சோகத்தில் உள்ளனர். அவர்களை உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர்.

    இதற்கிடையே மாயமான மாணவியை கண்டுபிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மாணவியை தேடி வருகின்றனர். மாணவி மாயமானரா? அல்லது யாராவது கடத்தி சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்நிலையில் மாணவியை எங்கு தேடியும் கிடைக்காததால், மாணவியின் தந்தை சுதாகரன், தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் தனது மகளின் புகைப்படம், பெயர், வயது, வீட்டின் முகவரி என அனைத்து தகவல்களையும் சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் பதிவிட்டார். அதில், இந்த புகைப்படத்தில் உள்ள மாணவியின் பெயர் ஸ்ரீநிதி, கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த அவரை நேற்று மதியம் முதல் காணவில்லை. அவரை யாராவது பார்த்தால் அதில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் என கூறப்பட்டிருந்தது.

    தற்போது இந்த தகவலானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மின்னல் வேகத்தில் வைரலாகி வருகிறது.

    இதனை பார்க்கும் பலரும் தங்களது செல்போனில் உள்ள வாட்ஸ் அப், பேஸ் புக் குழுக்களில் பகிர்ந்து மாணவியை கண்டுபிடிக்க தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். மாணவி மாயமானது அவரது பெற்றோரையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    Next Story
    ×