என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
படகு கவிழ்ந்ததில் பலியான மீனவர் குடும்பத்திற்கு விஜய்வசந்த் எம்.பி. ஆறுதல்
- காணாமல் போன ஆரோக்கியம், ஆன்றோ 2 மீனவர்களின் வீடுகளுக்கும் சென்று ஆறுதல் கூறினார்.
- குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் மற்ற மீனவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
நாகர்கோவில்:
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு பகுதியில் தமிழகத்தை சோ்ந்த 16 மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் படகு கடல் சீற்றத்தினால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 13 மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர். மீதி 3 பேர் கடலில் காணாமல் போய் விட்டனர். அதில் மீனவர் பயசின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்தநிலையில் விஜய்வசந்த் எம்.பி. விபத்தில் உயிரிழந்த குளச்சல் கொட்டில்பாடு ஊரை சேர்ந்த பயஸ் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார். மேலும் காணாமல் போன ஆரோக்கியம், ஆன்றோ ஆகிய 2 மீனவர்களின் வீடுகளுக்கும் சென்று ஆறுதல் கூறினார்.
பின்னர் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் மற்ற மீனவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார். காணாமல் போன மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும், மேலும் கடலில் கவிழ்ந்த படகு மற்றும் அதில் பொருத்தப்பட்டிருந்த கருவிகள் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு அரசு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டு கொள்வதாக தெரிவித்தார்.








