search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
    X

    வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    • வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதி நிலைநாட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
    • சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

    சென்னை:

    வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு குறித்தும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாகவும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டத்துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.

    தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது சட்டம் இயற்றப்பட்டது.

    2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி அந்த சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

    வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதோடு, 25-க்கும் மேற்பட்டவர்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவை அனைத்தும் ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டது. விசாரணைக்கு பிறகு நீதிபதிகள் தீர்ப்பு கூறுகையில், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர்.

    இதையடுத்து தமிழக அரசு சார்பில் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது பின்னர் அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அவசர சட்டத்தை ரத்து செய்து ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு கூறியிருந்தனர்.

    இதையடுத்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதி நிலைநாட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதுகுறித்து அண்மையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், முதலமைச்சரை நேரடியாக சந்தித்து வலியுறுத்தினார்.

    இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விரிவான ஆலோசனை மேற்கொண்டார். சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

    அதேபோல் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் சிலவற்றை நிலுவையில் வைத்திருப்பதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தமிழக அரசு வழக்கு தொடுத்திருந்த நிலையில், அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றியும், கோர்ட்டில் முன் வைக்க வேண்டிய விவாதங்கள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வில்சன் எம்.பி, சட்டத்துறை செயலாளர் உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×