என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ரோட்டில் முறிந்து விழுந்து கிடந்த மரங்கள் அப்புறப்படுத்தப்படும் காட்சி.
ஊட்டி, கூடலூரில் மரங்கள் முறிந்து விழுந்ததால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
- பைக்காரா அருவி அருகே உள்ள 2 பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து நடுரோட்டில் விழுந்தன.
- பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் கிடந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், ஊட்டி- கூடலூா் சாலையோரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்றும் பணியில் வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் அங்கு பலத்த காற்று வீசியது. இதில் பைக்காரா அருவி அருகே உள்ள 2 பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து நடுரோட்டில் விழுந்தன.
இதையடுத்து நெடுஞ்சாலை மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு கிடந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதேபோல கூடலூா் தாலுகா ஓவேலி பேரூராட்சியில் உள்ள சூண்டி பகுதியில் சாலையோரம் நின்ற ஒரு பெரிய மரம் ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதனால் ஓவேலி-கூடலூா் இடையே சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் கிடந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.
கூடலூர் மண்வயல் பகுதியிலும் ரோட்டோரம் நின்ற பெரிய மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் அந்த சாலை துண்டிக்கப்பட்டது. எனவே தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் மரத்தை அறுத்து அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர்.






