search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வு எழுதுவதில் சிக்கல்- மத்திய அரசுக்கு பாமக தலைவர் கோரிக்கை
    X

    தமிழக மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வு எழுதுவதில் சிக்கல்- மத்திய அரசுக்கு பாமக தலைவர் கோரிக்கை

    • சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 'கிரேடு' குறிப்பிடப்பட்டுள்ளதால், அவர்களால் எளிதாக விண்ணப்பிக்க முடிகிறது.
    • தமிழ்நாடு மாநில பாடத்திட்ட மாணவர்கள் குறிப்பிடுவதற்காக ஏதேனும் குறியீட்டை அறிவிக்க வேண்டுகோள்

    சென்னை:

    2023 ஆம் ஆண்டிற்கான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. முதற்கட்ட தேர்வு, 2023 ஜனவரி 24 முதல் 31ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு ஜனவரி 12ல் முடிகிறது. விண்ணப்பத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண்ணை கட்டாயம் பதிவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, அவர்கள் பத்தாம் வகுப்பு முடித்தபோது, மதிப்பெண் இன்றி, 'ஆல் பாஸ்' மட்டும் வழங்கப்பட்டதால், ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 'கிரேடு' குறிப்பிடப்பட்டு உள்ளதால், அவர்களால் எளிதாக விண்ணப்பிக்க முடிகிறது.

    மாநில திட்டத்தில் படித்த மாணவர்கள் விண்ணப்பக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், பள்ளிக் கல்வித் துறை விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

    நுழைவுத் தேர்வு விண்ணப்பங்களில் 10ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    அதற்கான இடங்களில் தமிழ்நாடு மாநில பாடத்திட்ட மாணவர்கள் குறிப்பிடுவதற்காக ஏதேனும் குறியீட்டை தேசிய தேர்வு முகமை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக, 2020-21ம் கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பின், 'ஆல் பாஸ்' என்ற அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. எந்த மதிப்பெண்ணும் இன்றி, 'தேர்ச்சி' என்று மட்டும் குறிப்பிட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆல் பாஸ் பெற்று, பிளஸ் 1 சேர்ந்த மாணவர்கள், நடப்பு ஆண்டில் பிளஸ் 2 படித்து வருகின்றனர்.

    Next Story
    ×