என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனிப்புகள் வழங்கி பூக்கள் கொடுத்தார்.
    • பெரியார், அண்ணா, கருணாநிதி வகுத்த கோட்பாட்டின் படி சமூக நீதி ஆட்சி நடத்தி வருகிறோம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் மாநகராட்சி அரசு தொடக்க பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் மகத்தான திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    என்னுடைய கனவு திட்டங்களில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கியது முக்கியத்துவம் வாய்ந்தது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டார். முதலமைச்சரின் இந்த கனவு திட்டத்தால் மாணவ-மாணவிகள் மிகவும் பயன் அடைந்தனர். பெற்றோர்களும் எங்களது பிள்ளைகள் தற்போது பள்ளிக்கு சென்று காலை உணவு சாப்பிட்ட பிறகு வகுப்புகள் கவனிப்பதால் அவர்களால் நல்லபடியாக படிக்க முடிக்கிறது என்று மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி சுதந்திர தினவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றி வைத்து பேசும்போது, காலை உணவு திட்டம் இனி அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றார்.

    அதன்படி இன்று காலை நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த ஊராட்சி பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்காக தயார் செய்யப்பட்ட காலை உணவை அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். மேலும் அவர்களுக்கு தன் கைப்பட பரிமாறினார்.

    அப்போது அருகே அமர்ந்திருந்த மாணவ-மாணவிகளிடம் உங்களது பெயர் என்ன? எந்த ஊர்? எந்த வகுப்பில் படிக்கிறீர்கள் என அன்புடன் விசாரித்தார். காலை உணவு நன்றாக இருக்கிறதா? என கேட்டு நான் உணவு ஊட்டி விடவா என்றார். மாணவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை அவர்களுடனே அமர்ந்திருந்தார். பின்னர் நான் யார்? என கேட்க, அதற்கு மாணவர்கள் நீங்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என உற்சாகத்துடன் கூறினர்.

    தொடர்ந்து மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனிப்புகள் வழங்கி பூக்கள் கொடுத்தார். இதையடுத்து பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் செய்யப்பட்டுள்ள மேம்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ் எடுத்து கூறினார்.

    பின்னர் பள்ளி வளாகத்தில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தொடர்பாக விழா நடைபெற்றது. அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். பின்னர் உணவு தயார் செய்யப்படும் விதம் குறித்தும், மாணவர்களுக்கு பரிமாறப்படும் விதம் குறித்த காலை உணவு திட்டம் குறும்படம் வெளியிடப்பட்டது.

    இதையடுத்து விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    இன்று வாழ்வின் பொன்னாள். காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்து வைத்திருப்பது எனக்கு மன நிறைவை தருகிறது. திருக்குவளையில் கருணாநிதி படித்த பள்ளியில் மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்ததில் பெருமைப்படுகிறேன். திருக்குவளையில் உதித்த சூரியன் (கருணாநிதி) இந்தியா முழுவதும் பிரகாசமாக ஒளிர்ந்தது. திருக்குவளையில் கருணாநிதி தொடக்க பள்ளியை படித்து மேல்படிப்புக்காக திருவாரூர் பள்ளியில் சேர்ந்தார். இந்த 2 பள்ளிகள் தான் கருணாநிதியை தலைவராக மாற்றியது.

    நான் பல திட்டங்களை நிறைவேற்றினாலும் மாணவ செல்வங்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கி வைத்தது மிக மனநிறைவை தருகிறது. அதுபோல் அரசு பள்ளியில் படித்து முடித்து தற்போது கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000, அரசு நகர பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம், வரும் செப்டம்பர் 15-ந் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க உள்ள கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் ஆகியவற்றால் பெண்கள் பயன் அடைந்துள்ளனர். அதைவிட நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    சென்னை அசோக் நகரில் நடந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்றபோது அதில் கலந்து கொண்ட குழந்தைகள் சோர்வாக காணப்பட்டனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது பலரும் காலை உணவு சாப்பிடுவதில்லை என்பது தெரியவந்தது. அப்போது தான் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இது பற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது நிதிசுமை ஏற்படும் என கூறினர். ஆனால் மாணவர்களுக்கு நாம் செய்வது நிதி முதலீடு தான். கண்டிப்பாக காலை உணவு திட்டத்தை அமல்படுத்தியாக வேண்டும் என கூறி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    1955-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் தி.மு.க. ஆட்சியிலும் அந்த திட்டம் தொடர்ந்தது. 1971-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் மதிய உணவு திட்டம் செழுமைப்படுத்தப்பட்டு குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டமும் கொண்டு வரப்பட்டது. பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் மதிய உணவு திட்டம் விரிவுப்படுத்தப்பட்டன. எம்.ஜி.ஆருக்கு பிறகு 1989-ம் ஆண்டு ஆட்சி நடத்திய கருணாநிதி மதிய உணவில் முட்டைகள், கொண்டைக்கடலை உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களையும் சேர்த்து வழங்கினார். பின்னர் ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவும் மதிய உணவில் கலவை சாதம் திட்டத்தை அமல்படுத்தினார்.

    இப்படி கடந்த 2021-ம் ஆண்டு வரை பள்ளிகளில் மதிய உணவு திட்டம் தான் இருந்தது. ஆனால் அதற் பிறகு எனது தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தான் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    பெரியார், அண்ணா, கருணாநிதி வகுத்த கோட்பாட்டின் படி சமூக நீதி ஆட்சி நடத்தி வருகிறோம். இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு தான்.

    தற்போது நீட் தேர்வு மூலம் இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. மாணவர்களுக்கு படிப்பு மட்டும் தான் பறிக்க முடியாத சொத்து என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் நன்றாக படிக்க வேண்டும். எதை பற்றியும் கவலை கொள்ளாமல் படியுங்கள். நிலவுக்கு விண்கலம் அனுப்பி சாதனை படைத்த விஞ்ஞானிகள் போல் வாழ்க்கையில் உயரத்தை தொட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ், செல்வராஜ் எம்.பி, நாகை மாலி எம்.எல்.ஏ., தாட்கோ தலைவர் மதிவாணன், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த காலை உணவு விரிவாக்க திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 31008 அரசு பள்ளியில் 17 லட்சம் மாணவ-மாணவிகள் பயன்பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×