search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக பட்ஜெட்: கிராமப் பகுதிகளில் 2030-ம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்
    X

    தமிழக பட்ஜெட்: கிராமப் பகுதிகளில் 2030-ம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்

    • கீழடியில் ரூ.13 கோடி மதிப்பில் திறந்தவெளி சுரங்கம் அமைக்கப்படும்.
    • முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-

    நிதி நிலை அறிக்கையை தயாரிக்க வழிகாட்டிய முதலமைச்சருக்கு நன்றி.

    இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரம் கொண்டது தமிழ்நாடு. தமிழக அரசின் நலத்திட்டங்கள் தமிழர்களை தலை நிமிரச் செய்தன. நீதிக்கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்ட மேட்டூர் நீர்த்தேக்கத்தால் டெல்டா மாவட்டங்கள் பயனடைகின்றன. சர் பி.டி.தியாகராயரால் உருவாக்கப்பட்ட மதிய உணவு திட் டம் பின்னாட்களில் விரிவாக்கப்பட்டது.

    100 ஆண்டுகளில் பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட் தமிழர்களின் வாழ்வை தலைநிமிர்த்தியது. கலைஞர் கொண்டு வந்த ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் மகத்தான திட்டமாக அமைந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத்தொகை திட்டங்கள் ஆகியவை மகத்தான திட்டங்கள் ஆகும்.

    பேரறிஞர் அண்ணாவின் சொல்லோவியம்தான் நிதி நிலை அறிக்கையை தயாரிக்க உதவியது. கருணையும், நிதியும் ஒன்றாக சேரும்போது தமிழர்களின் வாழ்வு தலைநிமிர்கிறது. கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு ஓராண்டில் ரூ. 7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.

    கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடக்கிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றை 25 மொழிகளில் மொழி பெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    தமிழ் இலக்கிய படைப்புகளை உலகம் முழுவதும் எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், நூலகங்களில் தமிழ் நூல்களை இடம் பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் 3 ஆண்டுகளில் 600 நூல்கள் வெளியிடப்படும். மொழித் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

    கீழடி உள்ளிட்டவை போன்றே மேலும் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும். இதற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அகழாய்வுக்கு அதிகபட்ச தொகை ஒதுக்கும் மாநிலம் தமிழ்நாடு மட்டுமே.

    மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள் 100 பல்கலைக்கழகங்களில் இடம் பெற ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய இடங்களை கண்டறிய ஆழ்கடல் ஆய்வு செய்யப்படும்.

    கீழடியில் ரூ.13 கோடி மதிப்பில் திறந்தவெளி சுரங்கம் அமைக்கப்படும். கிராமப் பகுதிகளில் 8 லட்சம் மக்கள் குடிசைகளில் வாழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    கிராமப் பகுதிகளில் 2030-ம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். 2024-25-ம் ஆண்டில் 1 லட்சம் வீடுகள் தலா ரூ.3.5 லட்சம் செலவில் கட்டித்தரப்படும்.

    முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ரூ.365 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    5 ஆயிரம் நீர்நிலைகளை புனரமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ரூ.500 கோடியில் 5 ஆயிரம் ஏரிகள், குளங்கள் புனரமைக்கப்படும். 5 லட்சம் ஏழை குடும்பங்களை கண்டறிந்து வறுமையை அகற்ற 'தாயுமானவர் வறுமை ஒழிப்பு திட்டம்' அறிமுகப்படுத்தப்படும். திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய நிறுவனம் அமைக்கப்படும்.

    சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலைகள் அகலப்படுத்தப்படும். முக்கியமான சாலைகளை அகலப்படுத்தும் திட்டம் ரூ.300 கோடியில் செயல்படுத்தப்படும்.

    சென்னையை அழகுற மாற்றும் சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப் படும். சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கோவளம், பெசன்ட் நகர் கடற்கரைகள் மேம்படுத்தப்படும். வடசென்னை வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்படும்.

    சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை தீவுத்திடல் மேம்பாட்டு திட்டம் அறிமுகம் செய்யப்படும். வடசென்னையில் புதிய குடியிருப்புகள், திறன்மிகு பள்ளிகள் அமைத்து ஏரிகள் சீரமைக்கப்படும்.

    வடசென்னை வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்படும். சென்னை அடையாறு நதியை சீரமைக்க ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கப்படும்.

    பூந்தமல்லியில் ரூ.500 கோடி ஒதுக்கீட்டில் அதி நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும். தமிழ்நாட்டின் முதன்மையான நதிகளை புனரமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

    கோவையில் நதிகளை சீரமைக்க ரூ.5 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். நாமக்கல், திண்டுக்கல், பெரம்பலூருக்கு புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.

    1 கோடியே 17 லட்சம் குடும்பங்கள் பயன்பெற மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக ரூ.13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நீலகிரி, வால்பாறை போன்ற மலைப்பகுதிகளிலும் மகளிர் இலவச பஸ் பயண திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

    சென்னை உள்பட அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க நகர்ப்புற பசுமை திட்டம் அறிமுகம் செய்யப்படும். 100 நாள் வேலை என்று அழைக்கப்படும் ஊரக வேலை திட்டத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    வரும் கல்வி ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×