search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியிடம் குழந்தையை கொடுத்து சென்ற இளம்பெண்- போலீஸ் விசாரணை
    X

    வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியிடம் குழந்தையை கொடுத்து சென்ற இளம்பெண்- போலீஸ் விசாரணை

    • சந்தேகம் அடைந்த அச்சரா சம்பவம் குறித்து தனது தந்தைக்கு தகவல் கொடுத்தார்.
    • குழந்தையை ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ரவி (வயது48). டாஸ்மாக் ஊழியர். இவரது மகள் அச்சரா (19). கல்லூரி மாணவி.

    சம்பவத்தன்று ரவி வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அச்சரா மட்டும் தனியாக இருந்தார்.

    அப்போது பர்தா அணிந்தபடி கையில் குழந்தையுடன் பெண் ஒருவர் திடீரென அச்சராவின் வீட்டிற்குள் வந்தார். உடனே அச்சரா நீங்கள் யார்? என்ன வேண்டும் என கேட்டார்.

    அதற்கு அவர், எனக்கு 2 குழந்தைகள் உள்ளன. ஒரு குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை. அதனால் குழந்தையை பஸ் நிலையத்தில் படுக்க வைத்து விட்டு வந்துள்ளேன்.

    இந்த குழந்தையை நீங்கள் கொஞ்சம் நேரம் வைத்திருந்தால், உடல் நலம் பாதிக்கப்பட்ட எனது மற்றொரு குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுவிட்டு வருவேன்.

    பின்னர் வந்து குழந்தையை பெற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தார். இதை உண்மை என நம்பி அச்சராவும், குழந்தையை கொடுங்கள் நீங்கள் வரும் வரை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். இதையடுத்து இளம்பெண் அச்சராவிடம் குழந்தையை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

    நீண்ட நேரமாகியும் இளம்பெண் திரும்பி வரவே இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த அச்சரா சம்பவம் குறித்து தனது தந்தைக்கு தகவல் கொடுத்தார். அவரும் வந்து மகளிடம் விசாரித்து விட்டு, அவர் கூறிய தகவல் படி பஸ் நிலையம் முழுவதும் அந்த பெண்ணை தேடி பார்த்தார்.

    ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ரவி தேவாலா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர்.

    அப்போது இளம்பெண் ஒப்படைத்தது பிறந்து ஒரு வாரமே ஆன ஆண்குழந்தை என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் தனியாக இருந்த கல்லூரி மாணவியிடம் குழந்தையை கொடுத்த சென்ற பெண் யார்? எதற்காக குழந்தையை கொடுத்தார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

    மேலும் அந்தபகுதிகளில் சி.சி.டி.வி கேமிராக்கள் இருக்கிறதா என்பதை பார்த்து, அதில் ஏதாவது தகவல்கள் கிடைக்கிறதா என்பதையும் சேகரித்து வருகிறன்றனர்.

    இதற்கிடையே சைல்டு லைன் அமைப்பிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு வந்து, குழந்தையை மீட்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தனர்.

    தொடர்ந்து குழந்தையை ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் பந்தலூர் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×