search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேட்பாளர்கள்-அதிகாரிகள் எட்டி பார்க்காததால்  உடுமலை மலைவாழ் மக்கள் வேதனை
    X

    சிகிச்சைக்காக கர்ப்பிணி பெண்ணை தொட்டில் கட்டி தூக்கி வந்த மலைவாழ் மக்கள்.

    வேட்பாளர்கள்-அதிகாரிகள் எட்டி பார்க்காததால் உடுமலை மலைவாழ் மக்கள் வேதனை

    • முறைப்படி பாதை அமைத்துக் கொடுத்து விட்டு வாக்கு சேகரிக்க வாருங்கள்.
    • பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்னும் பிரசாரத்திற்கு அரசியல் கட்சியினர் யாரும் செல்லவில்லை.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள மாவடப்பு, குழிப்பட்டி குருமலை, மேல்குருமலை, பொறுப்பாறு, தளிஞ்சி, தளிஞ்சு வயல், ஆட்டுமலை, கோடந்தூர் உள்ளிட்ட குடியிருப்புகளில் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

    இவர்கள் பாதை வசதியை அமைத்து தரக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். அதைத்தொடர்ந்து திருமூர்த்தி மலையிலிருந்து குருமலை வரை உடுமலை வனச்சரகத்தில் சாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான பணி தொடங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது.

    இதனால் மலைவாழ் மக்கள் அவசர கால தேவையை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்தநிலையில் குழிப்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகம்மாள் (வயது 22) என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. மலைவாழ் மக்கள் அவரை தொட்டில் கட்டி சுமார் 7 கிலோமீட்டர் சுமந்து வந்து எரிசனம்பட்டி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு நாகம்மாளுக்கு குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

    மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டி நாகம்மாளை தூக்கி வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்ததால் அவர் உயிர் பிழைத்துள்ளார். இல்லையென்றால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டி ருக்கும்.

    இது குறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

    பாதை வசதி கேட்டு நீண்ட நாட்களாக போராடி வருகின்றோம்.ஆனால் அதற்கான அனுமதி அளித்த பின்னரும் கூட பாதை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.இதனால் பிரசவம், விபத்து, அவசரகால சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. கடந்த 8 ஆண்டுக்கு முன்பு பிரசவத்திற்காக கொண்டுவரப்பட்ட போது தாயும் சேயும் இறந்து போன சோக சம்பவம் நடந்துவிட்டது.

    எனவே எந்த அரசியல் கட்சியினரும் வாக்குகள் சேகரிக்க குருமலை, குழிப்பட்டி, மாவடப்புக்கு வர வேண்டாம். முறைப்படி பாதை அமைத்துக் கொடுத்து விட்டு வாக்கு சேகரிக்க வாருங்கள். இல்லையென்றால் குடியிருப்புகளுக்குள் அனுமதிக்க மாட்டோம்.மேலும் நாங்கள் வாக்களிப்பை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அமராவதி வனச்சரக குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 3200 வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக கோடந்தூர், மாவடப்பு, தளிஞ்சி உள்ளிட்ட பகுதி களில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. தேர்தலின் போது பிரசாரத்திற்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் வாக்குப்பதிவு ஏற்பாடுகளுக்கு வரும் அதிகாரிகளிடம் அப்பகுதி பொது மக்கள் தங்களது கோரிக்கை களை எடுத்து சொல்லலாம் என காத்திருந்தனர்.

    தற்போது பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்னும் பிரசாரத்திற்கு அரசியல் கட்சியினர் யாரும் செல்லவில்லை. மேலும் தேர்தல் அதிகாரிகளும் வாக்குப்பதிவு ஆய்வுக்கு செல்லவில்லை. இதனால் மலைவாழ் பகுதியில் தேர்தல் நடப்பதற்கான அறிகுறிகளே இல்லாமல் மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன.

    Next Story
    ×